/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பண இரட்டிப்பு மோசடியில் ரூ.3.4 கோடி கள்ளநோட்டு பறிமுதல் தேனியில் இருவர் கைது
/
பண இரட்டிப்பு மோசடியில் ரூ.3.4 கோடி கள்ளநோட்டு பறிமுதல் தேனியில் இருவர் கைது
பண இரட்டிப்பு மோசடியில் ரூ.3.4 கோடி கள்ளநோட்டு பறிமுதல் தேனியில் இருவர் கைது
பண இரட்டிப்பு மோசடியில் ரூ.3.4 கோடி கள்ளநோட்டு பறிமுதல் தேனியில் இருவர் கைது
ADDED : ஆக 16, 2024 12:56 AM

தேனி:தேனியில் பணம் இரட்டிப்பு மோசடிக்காக ரூ.3.4 கோடி மதிப்பிலான ரூ. 2 ஆயிரம் கள்ளநோட்டு வைத்திருந்த கருவேல்நாயக்கன்பட்டி சேகர்பாபு 45, பொம்மையகவுண்டன்பட்டி கேசவன் 36, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கார்கள், 16 அலைபேசிகளை பறிமுதல் செய்து கனிராஜா என்பவரை தேடிவருகின்றனர்.
சென்னை ஆவடி நாகம்மை நகர் தவச்செல்வம் 40. இவர் பழைய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை கமிஷன் பெற்று மாற்றி தரும் ஏஜன்டாக உள்ளார். இதே வேலை செய்யும் சென்னை சுரேஷ், ரஜினி மூலம் தேனியை சேர்ந்த கேசவன் அறிமுகம் ஆனார். கேசவன் தன்னிடம் உள்ள பழைய ரூ.2ஆயிரம் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் கூடுதல் கமிஷன் தருவதாக தவச்செல்வத்திடம் கூறினார்.
இதனை நம்பிய தவச்செல்வம் நேற்று முன்தினம் ரூ.10.75 லட்சத்துடன் சுரேஷ், ரஜினி ஆகியோருடன் தேனி வந்தார்.
இவர்கள் கேசவனுடன் டி.என்.60.ஏ.பி.5005 எண் பதிவு எண் கொண்ட காரில் சென்றனர். அதே காரில் சேகர்பாபு, கனிராஜா ஆகியோரும் இருந்தனர். தவச்செல்வம் கொண்டு வந்த ரூ.10.75 லட்சத்தை கேசவன் பெற்று கொண்டார். அதன்பின் காரில் வந்த தவச்செல்வம், சுரேஷ், ரஜினி ஆகியோரை தேனி புதுபஸ் ஸ்டாண்ட் அருகில் இறக்கிவிட்டு, ரூ.2ஆயிரம் நோட்டுகளை எடுத்து வருவதாக கூறி சென்றனர். இவர்கள் நீண்டநேரமாக திரும்பி வராததால் கேசவனை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' என வந்தது. தான் ஏமாற்றப்பட்ட தவச்செல்வம் தேனி போலீசில் புகார் அளித்தார்.
கைது
இந்நிலையில் தேனி சிவாஜி நகர் - புதுபஸ் ஸ்டாண்ட் ரோட்டில் எஸ்.ஐ., ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.3.40 கோடி மதிப்பிலான ரூ. 2ஆயிரம் கள்ள நோட்டுகளாக 170 கட்டுகளாக அட்டை பெட்டியில் இருந்தது. அக்காரில் வந்த சேகர்பாபு, கேசவனை போலீசார் கைது செய்தனர். கள்ள நோட்டுகள், காரை பறிமுதல் செய்தனர்.
இவர்களது வீடுகளில் டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் உதயகுமார் நடத்திய சோதனையில் ஒரிஜினல் ரூபாய் 14 லட்சம் , 2 கார்கள், 16 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன. ஏற்கனவே சேகர்பாபு மீது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பண மோசடி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் கூறுகையில் 'செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள் தபால் அலுவலகம், ரிசர்வ் வங்கியில் மாற்றப்படுகிறது.இதனால் ஒரு லட்சம் வழங்கினால் இரண்டு லட்சம் அல்லது ஒன்றரை லட்சமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக வழங்குவதாக இந்த கும்பல் ஆசை காட்டியுள்ளது.
இவர்களிடம் சிக்குவோரை குறிப்பிட்ட இடத்திற்கு வரக் கூறி, 'ஒரிஜினல்' ரூபாய் நோட்டுகள், அலைபேசியை பறித்து செல்வர். கள்ளநோட்டுகள் எவ்வாறு கிடைக்கிறது என விசாரிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றனர்.