ADDED : மார் 23, 2024 06:13 AM

ஆண்டிபட்டி: தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் ஓட்டு கேட்போம் என்று தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில் கூறினார்.
தி.மு.க.,வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில் உள்ள எம்.எல்.ஏ., மகராஜன் வீட்டிற்கு தெப்பம்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து வைகை ரோட்டில் உள்ள ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., வீட்டிற்கு தொண்டர்கள் கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்றார். அவருக்கு எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், மற்றும் நிர்வாகிகள், காங்., கம்யூ., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கியும், பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும், மாநில உரிமைகளை பாதுகாக்கவும் பொதுமக்களிடம் ஓட்டு கேட்போம்.
இண்டியா கூட்டணி இந்திய அளவிலும், தி.மு.க., தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். நாங்கள் சொல்வது மக்களிடம் எடுபடும். 13 கட்சிகள் கூட்டணி,மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றிபெறுவேன் என்றார்.

