/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டோலி கட்டி தூக்கி வந்த பெண் இறப்பு
/
டோலி கட்டி தூக்கி வந்த பெண் இறப்பு
ADDED : மார் 14, 2025 06:13 AM

--
பெரியகுளம்: வெள்ளகெவி மலைப்பகுதியிலிருந்து பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு உடல் நலம் பாதித்த மணிமேகலையை டோலி கட்டி தூக்கி வந்தும் காப்பாற்ற முடியாமல் இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா வெள்ளகெவி ஊராட்சி பகுதியை சேர்ந்த ராம்குமார் மனைவி மணிமேகலை 33. குறைந்த ரத்த அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ வசதி இல்லாததால் நேற்று முன்தினம் இரவு மணிமேகலையை பத்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் டோலி கட்டி தலையில் 'லைட்' கட்டிக்கொண்டு அதன் வெளிச்சத்தில் நீர்நிலைகளை கடந்து, கும்பக்கரை வழியாக 12 கி.மீ., தூக்கி வந்தனர். அங்கிருந்து வாகனத்தில் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் மணிமேகலை இறந்து விட்டதாக தெரிவித்தார். உடலை மீண்டும் மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையால் நேற்று காலை பெரியகுளம் சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. வெள்ளகெவிக்கு ரோடு வசதி செய்து தர மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.