/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலையில் டாஸ்மாக் திறக்க பெண் தொழிலாளர்கள் எதிர்ப்பு
/
மேகமலையில் டாஸ்மாக் திறக்க பெண் தொழிலாளர்கள் எதிர்ப்பு
மேகமலையில் டாஸ்மாக் திறக்க பெண் தொழிலாளர்கள் எதிர்ப்பு
மேகமலையில் டாஸ்மாக் திறக்க பெண் தொழிலாளர்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 13, 2024 11:45 PM
கம்பம்: மேகமலை பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறக்க முயற்சி மேற்கொள்வதை அறிந்து, தோட்ட தொழிலாளர்கள் பெண்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சின்னமனூரிலிருந்து 46 கி.மீ. தொலைவில் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு வெண்ணி யாரு , இரவங்கலாறு , மகாராசா மெட்டு உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உள்ளது. இவற்றில் நூற்றுக்கணக்கில் தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வந்தது. சுற்றுலா வந்து தங்கியிருந்த உயர்மன்ற நீதித்துறை அதிகாரி ஒருவர் மதுக்கடையை அகற்ற உத்தரவிட்டார். உடனடியாக கடை அகற்றப்பட்டது. அதன் பின் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் இல்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் டாஸ்மாக் திறக்க நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அங்குள்ள தோட்ட தொழிலாளர் பெண்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கூட்டமைப்பு பெண்கள் கூறுகையில், டாஸ்மாக் இல்லாததால் எந்தவித பிரச்னையும் இன்றி நிம்மதியாக இருந்தோம். தற்போது கடை திறந்தால் வாங்கும் கூலியை குடித்து விட்டு வெறும் கையுடன் ஆண்கள் வீடு திரும்புவார்கள். நாங்களும், குழந்தைகளும் பட்டினியாய் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மேகமலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். கடை திறந்தால் பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவோம் என்கின்றனர்.