/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியை வீட்டில் நடந்த கொள்ளையில் மீட்கப்படாத நகைகளால் சர்ச்சை திருடன் தப்பி ஓடிய போது 15 பவுன் சிதறியது
/
ஆசிரியை வீட்டில் நடந்த கொள்ளையில் மீட்கப்படாத நகைகளால் சர்ச்சை திருடன் தப்பி ஓடிய போது 15 பவுன் சிதறியது
ஆசிரியை வீட்டில் நடந்த கொள்ளையில் மீட்கப்படாத நகைகளால் சர்ச்சை திருடன் தப்பி ஓடிய போது 15 பவுன் சிதறியது
ஆசிரியை வீட்டில் நடந்த கொள்ளையில் மீட்கப்படாத நகைகளால் சர்ச்சை திருடன் தப்பி ஓடிய போது 15 பவுன் சிதறியது
ADDED : ஆக 16, 2025 02:54 AM
சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூரில் ஆசிரியை புனிதா வீட்டில் நடந்த நகை கொள்ளையில் மீட்கப்படாத நகைகளால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் திருடன் தப்பி ஓடிய போது 15 பவுன் நகைகள் சிதறி கீழே விழுந்ததை உரிமையாளர்கள் எடுத்து கொண்டதாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
சின்னமனூர் மின் நகரில் வசிக்கும் ஆசிரியர் தம்பதி ஜெகதீசன் - புனிதா. இவர்கள் ராஜா என்பவர் வீட்டின் தரைத்தளத்தில் வாடகைக்கு வசிக்கின்றனர். மாடியில் உரிமையாளர் ராஜா குடியிருக்கிறார். ஆக., 13 ல் தம்பதியர் பள்ளிகளுக்கு சென்றனர். மின்நகருக்கு பின்புறம் உள்ள டோபி கானா காலனியில் பேண்ட் வாத்தியம் இசைக்குழு உள்ளது. இக்குழுவில் பேண்ட் வாசிப்பவர் பெரியகுளம் வி.ஆர்.பி.,நாயுடு தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் 30. இவர் இங்குள்ள சித்தி வீட்டில் தங்கியுள்ளார்.
சம்பவ நாளான்று முத்துக்குமார் ஜெகதீசன் வீட்டு பூட்டை கம்பியால் உடைத்து நகைகளை கொள்ளையடித்தார். அந்த நேரம் மாடியில் குடியிருக்கும் ராஜா கீழே இறங்கினார். ஆசிரியர் வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு காலிங் பெல்லை அழுத்தினார். அப்போது முத்துக்குமார் நகைகளை திருடி சட்டை பாக்கெட்டில் திணித்தபடி வெளியே வந்தார்.
ராஜாவிடம் யார் நீங்கள் என முத்துக்குமார் கேள்வி எழுப்பினார். ராஜா 'நான் வீட்டின் உரிமையாளர், நீ யார்,' என்றவுடன், அதிர்ந்த முத்துக்குமார் அங்கிருந்து தப்பினார். ராஜா முதியவர் என்பதால் அவரை பிடிக்க முடியவில்லை. உடனே ஆசிரியருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
ஆசிரியை புனிதா புகாரில் 55.5 பவுன் நகைகள், 40 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ.5 ஆயிரம் என குறிப்பிட்டார். தற்போது போலீசார் 25 பவுன் நகைகளையே மீட்டுள்ளனர். 30.5 பவுன் நகைகளை மீட்கவேண்டியது உள்ளது.
இன்ஸ்பெக்டர் பாலாண்டி கூறியதாவது: 55.5 பவுன் கொள்ளை போனதாக புகார் கொடுக்கப்பட்டது. திருடன் ஓடும் போது கீழே தவறி விழுந்த 15 பவுன் நகைகளை புகார்தாரர் தரப்பில் எடுத்துள்ளனர்.
திருடப்பட்ட 40 பவுனில் 25 பவுன் மீட்கப்பட்டது. புகாரில் 10 பவுன் கூடுதலாக குறிப்பிட்டுள்ளதாக விசாரணையில் தெரிகிறது என்றார். விளக்கம் கேட்க ஆசிரியர் தம்பதியை தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை.