ADDED : அக் 27, 2024 06:26 AM

கம்பம் : கம்பத்தில் 1500 ஏக்கரில் நெல் அறுவடை பணி நிறைவடைந்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறும் சாகுபடியில் தற்போது முதல் போக சாகுபடி அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் குச்சனூர் மற்றும் மார்க்கையன் கோட்டையில் முன்கூட்டியே அறுவடை துவங்கும், பின் கம்பத்தில் நடைபெறும்.
ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இந்தாண்டும் குச்சனூர் மார்க்கையன் கோட்டையில் துவங்கியது. ஆனால் சின்னமனூர், கருங்கட்டான்குளம் பகுதிகளில் பாக்கி உள்ளது.
கம்பம் வட்டாரத்தில் 1500 ஏக்கர் அறுவடை துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. கம்பத்தில் ஆர்.என். ஆர். ரகம் நல்ல மகசூல் கிடைத்துள்ளது . விவசாய சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில்,'வேளாண் துறை வழங்கிய கோ 53 ரகம் மகசூல் குறைவாக கிடைத்துள்ளது. இயந்திரங்கள் உதவியால் 1500 ஏக்கரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. 60 கிலோ மூடைக்கு ரூ. 1500 வரை விலை கிடைத்தது . தீபாவளி நெருங்குவதால் அறுவடை இயந்திரங்கள் மற்றும் எடை போடுபவர்கள் ஊருக்கு சென்று விட்டனர். எனவே அறுவடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது',என்றார்.