/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
18ம் கால்வாய் கரை உடைப்பு திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தம் -பலமுறை எச்சரித்த தினமலர் நாளிதழ்
/
18ம் கால்வாய் கரை உடைப்பு திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தம் -பலமுறை எச்சரித்த தினமலர் நாளிதழ்
18ம் கால்வாய் கரை உடைப்பு திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தம் -பலமுறை எச்சரித்த தினமலர் நாளிதழ்
18ம் கால்வாய் கரை உடைப்பு திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தம் -பலமுறை எச்சரித்த தினமலர் நாளிதழ்
ADDED : ஜன 01, 2024 06:15 AM

கூடலுார்; லோயர்கேம்ப் அருகே 18ம் கால்வாய் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டதால் திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தப்பட்டது. முன்கூட்டியே சீரமைப்பு பணிகளை செய்ய தினமலர் நாளிதழ் பலமுறை வலியுறுத்தி உள்ளது.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18 ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும். இக்கால்வாய் மூலம் 43 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் 4650 ஏக்கர் பாசனப்பரப்பு நிலங்கள் பயன்பெறுகின்றன.
ஆண்டுதோறும் இக்கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்படும். பெரியாறு, வைகை அணையில் நீர் இருப்பு 6.25 டி.எம்.சி., இருந்தால் தண்ணீர் திறக்கலாம் என்ற உத்தரவு உள்ளது. இந்தாண்டு அக்டோபர், நவம்பரில் நீர் இருப்பு 10 டி.எம்.சி. க்கு மேல் இருந்தும் தண்ணீர் திறக்கவில்லை. விவசாயிகள் பலமுறை போராட்டம் நடத்திய போதிலும் காலதாமதம் ஏற்பட்டது.
திடீர் திறப்பு
இந்நிலையில் டிச.,19 மாலை 5:00 மணிக்கு கால்வாயில் தண்ணீர் திறப்பதாக ஒரு மணி நேரத்திற்கு முன் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. திடீரென அறிவிக்கப்பட்டதால் கால்வாயின் கரைப்பகுதி சீரமைக்கவில்லை.
சேதமடைந்திருந்த கரைப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் அமைச்சர் பெரியசாமி 1 கி.மீ., தூரம் நடந்து சென்று கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார்.
உடைப்பு
கடந்த ஒரு வாரமாக தொட்டிப் பாலம் உள்ளிட்ட பல இடங்களில் நீர்க்கசிவு அதிகமாக ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று லோயர்கேம்ப் தலைமதகு பகுதி அருகே கரைப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் திறக்கப்பட்டிருந்த நீர் நிறுத்தப்பட்டது.
சேதமடைந்திருந்த பகுதிகளில் நீர்வளத் துறையினர் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைப்பு பணியை துவக்கியுள்ளனர்.
எச்சரித்த தினமலர் நாளிதழ்
கால்வாயின் கரைப்பகுதி பல இடங்களில் சேதம் அடைந்து இருப்பதாக முன்கூட்டியே தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
நீர்வளத்துறை அதிகாரிகள் இதைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் நீர் திறக்கப்பட்ட 10 நாட்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகியும் 27வது கி.மீ.,ல் உள்ள பண்ணைப்புரம் வரை மட்டுமே தண்ணீர் சென்றுள்ளது.
இனியும் 20 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. தற்போது சீரமைப்புப் பணிகள் முடிவடைய மூன்று நாட்களுக்கு மேல் ஆகும். மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை செல்வதற்கு மேலும் பல நாட்கள் ஆகும் என்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.