ADDED : ஏப் 22, 2025 06:37 AM
கூடலுார்: கூடலுாரில் தொடர்ந்து 400வது வாரமாக மரக்கன்றுகளை நட்டு சோலைக்குள் கூடல் அமைப்பினர் அசத்தியுள்ளனர்.
கூடலுாரில் 2015 நவம்பரில் சோலைக்குள் கூடல் என்ற அமைப்பை துவக்கினர். இதில் பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் நடத்திவரும் இயற்கை பயணத்தில் 4 ஆயிரம் கருவேல மரங்களை அகற்றி உள்ளனர். 11 ஆயிரம் மரக்கன்றுகளும், 4 ஆயிரம் பனை விதைகளும், 15 ஆயிரம் விதைப் பந்துகளையும் விதைத்துள்ளனர்.
400 வாரங்கள் தொடர்ந்து ஞாயிறுதோறும் இவர்கள் ஒருங்கிணைந்து மரக்கன்றுகள் நடுவது, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசமரம், அத்தி, ஆலமரம், வேம்பு, புங்கை, பூவரசு, வாகை, நாவல், மூங்கில், வில்வம், இலுப்பை, செண்பகம், நீர்மருது, மந்தாரை போன்ற மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.
கூடலுாரின் முக்கிய தெருக்கள், 18ம் கால்வாய் கரைப்பகுதி, அரசு விதைப்பண்ணை சாலை, தெற்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தாமரைக்குளம் ரோடு, கருநாக்கமுத்தன்பட்டி சாலை, அழகர் கோவில் பகுதி, மயான சாலை, கூடலூர் -லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் இவர்கள் நட்ட மரங்கள் வளர்ந்து, செழித்து வளர்ந்து அப்பகுதி பசுமையாகி உள்ளன.
400வது வாரம்
நேற்று 400வது வாரத்தை தொடர்ந்து கூடலுார் லோயர்கேம்ப் நெடுஞ்சாலையில் 4 மரக்கன்றுகள், 40 செவ்வரளி செடிகள் நட்டனர்.
தொடர்ந்து 400 வாரங்கள் அமைப்பில் பயணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.