/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதியோர் உதவித்தொகை பெற 5 ஆயிரம் பேர் காத்திருப்பு: உத்தரவு கிடைத்தும் பணம் கிடைக்காத அவலம்
/
முதியோர் உதவித்தொகை பெற 5 ஆயிரம் பேர் காத்திருப்பு: உத்தரவு கிடைத்தும் பணம் கிடைக்காத அவலம்
முதியோர் உதவித்தொகை பெற 5 ஆயிரம் பேர் காத்திருப்பு: உத்தரவு கிடைத்தும் பணம் கிடைக்காத அவலம்
முதியோர் உதவித்தொகை பெற 5 ஆயிரம் பேர் காத்திருப்பு: உத்தரவு கிடைத்தும் பணம் கிடைக்காத அவலம்
ADDED : நவ 28, 2024 05:48 AM
தேனி: மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெற உத்தரவு வழங்கியும் பணம் கிடைக்காமல் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காத்திருக்கின்றனர். அரசு நடவடிக்கை எடுக்காததால் பலர் மருத்துவ செலவுக்கு கூட திண்டாடி வருகின்றனர்.
மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1200, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது பெண்கள் 54,588 பேர், ஆண்கள் 18,148 பேர் என 72,736 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர தற்போது 60 வயது நிறைவடைந்த பலரும் உதவித்தொகை பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
இவர்கள் வழங்கும் ஆவணங்களை சரிபார்த்து, தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் உறுதி செய்கின்றனர். பின்னர் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு வழங்குகின்றனர். வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் 2023 ஆகஸ்ட் முதல் மே 2024 வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதியோர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வழங்கப்படுவதில்லை. அரசு உத்தரவு பெற்ற பலரும், தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என அலைந்து திரும்ப மனுக்கள் வழங்கினாலும் உரிய பதில் வழங்குவதில்லை. அரசு துறை அலுவலர்கள் அலட்சிய பதிலால் பயனாளிகள் பலரும் வேதனைப்படுகின்றனர்.
அரசு உதவித்தொகை வழங்கினால் பல முதியவர்களின் வாழ்வாதரத்திற்கும், மருத்துவ செலவு, உணவிற்கு பயனுள்ளதாக இருக்கும். உத்தரவு கிடைத்தும், பணம் கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பணம் கிடைத்திட மாவட்ட நிர்வாகம், சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.