/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டல் ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
/
ஓட்டல் ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
ADDED : பிப் 13, 2025 05:40 AM
தேனி: வீரபாண்டியில் ஓட்டல் ஊழியர் வீட்டில் 9பவுன் நகை, டி.வி.,யை திருடியவர்கள் மோப்பநாய் பின்தொடராமல் இருக்க அதன் போக்கை திசை மாற்றும் வகையில் வீட்டில் மிளகாய் பொடி துாவி சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரபாண்டி அம்மன் நகர் ஆறுமுகம். அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் பணிபுரிகிறார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த விழாவிற்காக பிப்.,8 ல் புறப்பட்டனர்.
நேற்று(பிப்.,12) வீடு திரும்பினர். அப்போது வீட்டின் வெளிகதவு பூட்டு உடைக்கப்பட்டும், நிலைக் கதவு உடைக்கப்பட்டும் இருந்தது.
வீட்டின் உள்பகுதியில் பல இடங்களில் மிளகாய் பொடி துாவப்பட்டு இருந்தது. பீரோ இருந்த அறையில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்தன.
லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.70லட்சம் மதிப்பிலான 9 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான டி.வி., திருடு போயிருந்தது. ஆறுமுகம் புகாரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சம்பவ வீட்டை மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரன் ஆய்வு செய்தார்.

