/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
30 ஆண்டுகளாக ஏலக்காயில் ஒரே ரகம் பயன்பாடு காலத்திற்கு ஏற்ற புதிய ரகம் அறிமுகம் செய்ய வேண்டும்
/
30 ஆண்டுகளாக ஏலக்காயில் ஒரே ரகம் பயன்பாடு காலத்திற்கு ஏற்ற புதிய ரகம் அறிமுகம் செய்ய வேண்டும்
30 ஆண்டுகளாக ஏலக்காயில் ஒரே ரகம் பயன்பாடு காலத்திற்கு ஏற்ற புதிய ரகம் அறிமுகம் செய்ய வேண்டும்
30 ஆண்டுகளாக ஏலக்காயில் ஒரே ரகம் பயன்பாடு காலத்திற்கு ஏற்ற புதிய ரகம் அறிமுகம் செய்ய வேண்டும்
ADDED : மார் 17, 2024 06:48 AM
கம்பம்; ஏலக்காய் சாகுபடியில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ரகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஸ்பைசஸ் வாரியத்தின் ஆராய்ச்சி நிலையங்கள் காலத்திற்கு ஏற்ற, புதிய ரகங்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்த எல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏலக்காய் பிரபலமாக துவங்கியது. வனப்பகுதியில் மானாவாரியாக விளைந்த ஏலக்காயை பறித்து சூரிய ஒளியில் காய வைத்து, துணி, உணவு பொருட்களுக்காக ஆதிவாசிகள் விற்பார்கள். திருவாங்கூர் மகாராஜா ஏற்பாட்டில் கம்பம் பள்ளத்தாக்கை சேர்ந்த விவசாயிகளுக்கு, குத்தகைக்கு வனப்பகுதிகளை வழங்கி ஏலக்காய் சாகுபடி செய்ய கூறினார். அவ்வாறு குத்தகைக்கு வழங்கிய நிலங்கள் இன்றளவும் கம்பம் பகுதியை சேர்ந்தவர்களிடம் ஏலத் தோட்டங்களாக உள்ளது.
சாகுபடியில் முந்துவது யார்
சர்வதேச அளவில் ஏலக்காய் இந்தியா மற்றும் குவாதிமாலா நாட்டிலும் மட்டுமே அதிகம் சாகுபடியாகிறது. குவாதிமாலா முதல் இடத்தை பெறுகிறது. இந்தியாவில் கேரளா 80, கர்நாடகா 10, தமிழ்நாடு 10 சதவீதங்களை பகிர்ந்து கொள்கிறது.
ஏலக்காய் பெயர் காரணம் : ஏலக்காயை பறித்து வந்து கிராம வீதிகளில் குவித்து வைத்து கூவி கூவி ஏலம் போட்டு விற்பனை செய்வார்கள். அதுவே மருவி ஏலம் விடப்பட்டதால் ஏலக்காய் என பெயர் வந்ததாக கூறுகின்றனர்.
விற்பனையில் கட்டுப்பாடுகள்
பிற வேளாண் விளை பொருள்கள் போன்று ஏலக்காயை விற்க முடியாது. ஏலக்காயை ஸ்பைசஸ் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற ஆக்சன் கம்பெனிகளில் வழங்க வேண்டும். அவர்கள் ஸ்பைசஸ் வாரியத்தின் ஏல மையங்களில் சாம்பிள் காய்களை வைத்து ஏலம் விடுவார்கள்.
கொள்முதல் செய்வதும் ஸ்பைசஸ் வாரியத்தின் அங்கீகாரம் பெற்றவர்களே கொள்முதல் செய்ய முடியும். காய்கறிகள், வாழை, தென்னை போன்றவற்றை விற்பது போல ஏலக்காய் விற்க முடியாது.
என்னென்ன ரகங்கள்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மைசூர், மலபார், வழுக்கை என மூன்று ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டது. ஏக்கருக்கு 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் 1990 களில் ஏல விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் உருவாக்கிய நல்லாணி என்ற ரகம் 30 ஆண்டுகளாக இன்று வரை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். காரணம் நல்லாணி ரகம் ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. நல்லாணியுடன் போட்டி போட வேறு ரகங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.
மருத்துவ குணங்கள் நிறைந்தது
ஏலக்காய் பேக்கரி, இனிப்பு வகைகளில் சேர்க்கின்றனர். செரிமான கோளாறுகள், தொண்டை அழற்சி, நுரையீரலை வலுப்படுத்தும் திறன் கொண்டது. நல்ல மணம், சுவையும் இருக்கும். எனவே தேயிலையில் அதிகம் சேர்ப்பார்கள்.
வளைகுடாவில் பயன்பாடு அதிகம்
இந்திய ஏலக்காய் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும், வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். சவுதியில் வீடுகளில் வழங்கப்படும் காபா என்ற பானம் முழுக்க முழுக்க ஏலக்காயால் தயாரிக்கப்படுகிறது. நாம் காபி, டீ குடிப்பது போல அங்கு காபா பானம் அருத்தப்படுகிறது.
மகசூல் குறைகிறது
ரசாயன உரங்கள், பூச்சிமருந்து அதிகம் பயன்படுத்துவதால் மண்ணில் புளிப்பு தன்மை அதிகரித்து, காய்பிடிப்பு திறன் அதாவது சராசரி மகசூல் குறைந்து வருகிறது. எனவே ஏற்றுமதியிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ஸ்பைசஸ் வாரியத்தின் ஆராய்ச்சி நிலையங்கள் புதிய ரகங்களை கண்டுபிடித்து அறிமுகம் செய்ய ஏல விவசாயிகள் கோரிக்கை விடுவதுள்ளனர்.

