ADDED : பிப் 05, 2024 12:18 AM
போடி : தேனி மாவட்டம் போடியில் அயிரை மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நேற்று கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.
அயிரை மீன்கள் ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் மட்டுமே பிடிக்க முடியும். கேரளா, குரங்கணி மலைப் பகுதியில் மழை இல்லாததால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. தனி ஒருவர் என்பதை விட 2 பேர் சேர்ந்து ஆற்றுப் பகுதியில் பல மணி நேரம் காத்திருந்து அயிரை மீன்களை பிடிக்கின்றனர்.
தற்போது தட்ப வெட்ப சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சளி, இருமலுக்கு அயிரை மீன் குழம்பு சிறந்த மருந்து என்பதால் பலரும் வாங்கி குழம்பு வைத்து உண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடியில் அயிரை மீன்கள் வரத்து குறைவால் ரூ.1400 வரை விற்பனை அயிரை மீன் தற்போது கிலோ ரூ.1800 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அயிரை மீன்கள் வரத்து குறைவால் மார்க்கெட்டில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

