/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., ஒன்றியச் செயலர் தங்கை மகன் கைது
/
அ.தி.மு.க., ஒன்றியச் செயலர் தங்கை மகன் கைது
ADDED : செப் 21, 2024 12:52 AM

தேனி:தேனியில் 182 ஏக்கர் அரசு நில அபகரிப்பு வழக்கில் கைதாகி, ஜாமினில் உள்ள பெரியகுளம் அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷின் தங்கை மகன் நரேஷ்குமார் 32, என்பவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலங்கள், அதிகாரிகள் துணையுடன் அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டன. இதனை பெரியகுளம் சப் கலெக்டராக இருந்த ரிஷப் விசாரணையில் கண்டறிந்தார்.
பின் ஆர்.டி.ஓ., தாசில்தார்கள், சர்வேயர், வி.ஏ.ஓ., தேனி, பெரியகுளம் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் என 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணையில் அ.தி.மு.க., ஒன்றியச் செயலார் அன்னப்பிரகாஷ் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் என 20 பேர், இதுவரை கைது செய்யப்பட்டு அனைவரும் ஜாமினில் வெளியில் உள்ளனர். இந்நிலையில் வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள 2.4 ஏக்கர் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நரேஷ்குமார் பெயரில் பதிவு செய்து, அவர், அதனை வேறு உறவினர்களுக்கு நிலத்தை மாற்றி பத்திரம் பதிவு செய்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
இதனால் சி.பி.சி.ஐ.டி., மதுரை மண்டல டி.எஸ்.பி., சரவணன், தேனி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் வடபுதுப்பட்டி ஜே.ஜே.காலனியை சேர்ந்த நரேஷ்குமாரை கைது செய்தனர்.
அவர் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுபடி, தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.