/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கு போராடும் அவலம் ரங்கசமுத்திரம் கண்மாய் பராமரிப்பு இன்றி முழுமையாக நீர்தேங்காத நிலை
/
மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கு போராடும் அவலம் ரங்கசமுத்திரம் கண்மாய் பராமரிப்பு இன்றி முழுமையாக நீர்தேங்காத நிலை
மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கு போராடும் அவலம் ரங்கசமுத்திரம் கண்மாய் பராமரிப்பு இன்றி முழுமையாக நீர்தேங்காத நிலை
மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகத்திற்கு போராடும் அவலம் ரங்கசமுத்திரம் கண்மாய் பராமரிப்பு இன்றி முழுமையாக நீர்தேங்காத நிலை
ADDED : செப் 26, 2024 05:49 AM

ஆண்டிபட்டி: கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய்கள் பராமரிப்பின்மையால் ரங்கசமுத்திரம் கண்மாயில் முழு அளவில் நீர் தேக்க முடியாததால் ஆண்டுக்கு மூன்று போகம் விளைந்த நிலங்களில் ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம், ரங்கசமுத்திரம் கண்மாய் 250 ஏக்கர் பரப்பில் உள்ளது. வருஷநாடு மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் மழைக்காலத்தில் நீர் வரத்து கிடைக்கும். மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர்கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் நாகலாறு ஓடை வழியாகவும் நீர் வரத்து கிடைக்கும். கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் ரங்கமுத்திரம், நாச்சியார்புரம், கோவில்பட்டி, குரும்பபட்டி கிராமங்களுக்கு உட்பட்ட 250 ஏக்கரில் நேரடி பாசன வசதி கிடைக்கும். கண்மாயில் தேங்கும் நீரால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்து இறவை பாசனம் மேம்படும். கடந்த பல ஆண்டுகளாக நாகலாறு ஓடை வழியாக போதுமான நீர் வரத்து இல்லை. இதனால் மூன்று போகம் விளைவிக்க வேண்டிய நிலங்களில் ஒரு போகதிற்கே போராட வேண்டியுள்ளது.கண்மாய் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
உபரி நீரை கொண்டு வர வேண்டும்
காவடிபொன்ராஜ், விவசாயி ரெங்கசமுத்திரம்: மூல வைகை ஆற்றில் உள்ள துரைச்சாமிபுரம் தடுப்பணையில் இருந்து வரும் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. கால்வாய் சீரமைத்தும் மழைக்காலத்தில் தொடர்ச்சியாக நீர் கிடைக்காததால் கண்மாய் நிரம்புவதில்லை.
கண்மாயில் ஆண்டு முழுவதும் நீர் இருந்தால் லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சீரங்காபுரம், ஜம்புலிபுத்தூர், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் நிலத்தடி நீரால் வளம் பெறும். நாகலாறு ஓடையில் வரும் நீரும் கடந்த பல ஆண்டுகளாக கண்மாய் வந்து சேர்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் வாய்க்காலில் மண் அடைப்பை நீக்கி பராமரிப்பதில்லை. துரைச்சாமிபுரம் கால்வாயின் கடைசி பகுதியில் ரங்கசமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளதால் நீர் முழுமையாக வந்து சேர்வதில்லை. குன்னூர் அருகே கருங்குளம், செங்குளம் கண்மாய்கள் நிரம்பிய பின் உபரியாக செல்லும் நீரை ரங்க சமுத்திரம் கண்மாய்க்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்வாய் ஆக்கிரமிப்பால் நீர் வரத்து இல்லை
வேல்முருகன், விவசாயி, ரங்கசமுத்திரம் : ரங்கசமுத்திரம் கண்மாய் ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. கண்மாய் அமைக்க விவசாயிகள் நிலங்களை மனமுவந்து தானமாக கொடுத்தனர். அதற்குப் பிரதிபலனாக குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கண்மாய்க்கு நீர் கொண்டுவர அரசு முன்வந்தது. ஆனால் அன்றைய பருவநிலை சரியாக இருந்ததால் நாகலாறு ஓடை வழியாக வரும் நீரே கண்மாய்க்கு போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்ததால் திட்டத்தை கைவிட்டனர். தற்போது கண்மாய்க்கு தேவையான நீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். நீர்வரத்து கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர் தடைபடுகிறது. குன்னூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கால்வாய் அமைத்து குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இப் பகுதியில் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெறும். விவசாயத்துடன் சார்ந்த உப தொழில்களும் வளர்ச்சி பெறும்.
மழை நீரை திசை திருப்புவதால் வீணாகிறது
கிருஷ்ணமூர்த்தி, விவசாயி நாச்சியார்புரம்:கதிரியக்கவுண்டன்பட்டியில் இருந்து கண்மாயின் வடக்கு பகுதியில் உள்ள சக்கிலிச்சி அம்மன் கோயில் வரை கண்மாய்கரை பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. கண்மாயில் முழு அளவில் நீர் தேங்கினால் பாதிப்பு ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாகியும் கண்மாய்க்கரை பலப்படுத்தும் நடவடிக்கை இல்லை.
கண்மாய்க்கரையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் கண்மாய்க்கரையின் உறுதித் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. கரிசல்பட்டி ஷட்டர் முதல் கண்மாய் வரை உள்ள நீர் வரத்து கால்வாயை அகலப்படுத்தி தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
மழைக்காலத்தில் காட்டுப் பகுதியில் இருந்து வரும் மழைநீரை விவசாயிகள் திசை திருப்பி விடுவதால் கண்மாயில் சேராமல் வீணாகிறது.
கண்மாய் மேம்பாட்டிற்கு இப்பகுதி விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.