/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
/
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
ADDED : அக் 08, 2024 04:26 AM
பெரியகுளம், : பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து சீரானதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ.,தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் மதியம் 1:20 மணிக்கு அருவியில் தண்ணீர் கூடுதலாக வந்தது.
இதனால் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் வேகமாக கரைக்கு திரும்ப வனத்துறை அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தண்ணீர் வரத்து சீராகும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று இரவில் மழை இல்லாததால் வெள்ளப்பெருக்கு குறைந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அருவியில் தண்ணீர் வரத்து சீரானது.
இதனால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்தது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் அருவியில் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.