/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒன்பது ஆண்டுகளாக மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதியவர்; 2 ஆயிரம் மரக்கன்றுகள், 7 ஆயிரம் பனை விதைகள் நட்டு பராமரிப்பு
/
ஒன்பது ஆண்டுகளாக மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதியவர்; 2 ஆயிரம் மரக்கன்றுகள், 7 ஆயிரம் பனை விதைகள் நட்டு பராமரிப்பு
ஒன்பது ஆண்டுகளாக மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதியவர்; 2 ஆயிரம் மரக்கன்றுகள், 7 ஆயிரம் பனை விதைகள் நட்டு பராமரிப்பு
ஒன்பது ஆண்டுகளாக மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முதியவர்; 2 ஆயிரம் மரக்கன்றுகள், 7 ஆயிரம் பனை விதைகள் நட்டு பராமரிப்பு
ADDED : ஜன 15, 2024 12:01 AM

மனிதர்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மரங்களால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றின் நிழல், பழங்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை உயிரினங்கள் உயிர் வாழ பெரிதும் உதவுகின்றன. ஆனால் மரங்கள் வளர்க்க வேண்டும் என அனைவரும் ஆசைப்பட்டாலும் அதனை நடவு செய்து பராமரித்து வருவது சிலரே. தன்னார்வலர்கள் உதவியுடன் மனைவியின் ஆசைக்காக 'நல்லுசேவகன் மரம் வளர்ப்பு' என்ற அறக்கட்டளை மூலம் மரங்களை நடவு செய்து பராமரித்து வருகிறார் ஸ்ரீரங்காபுரம்லட்சுமணன். தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகிறார்.
தொடக்க காலத்தில் தன்னந்தனியாக நடவுப் பணிகளை மேற்கொண்ட இவரின் தன்னலமற்ற பணிகளை பார்த்து, பலர் உதவி புரிந்தனர். அதனால் தொய்வின்றி மரக்கன்றுகளை நடவு செய்வது, பனை விதைகளை துாவும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
9 ஆண்டுகள் நடவுப்பணி
லட்சுமணன், ஸ்ரீரங்காபுரம், தேனி : சிறுவயதில் இருந்து டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து உள்ளேன். தோட்ட வேலைகளில் நானும் எனது மனைவியும் ஈடுபட்டு வந்தோம். மரங்கன்றுகள் வளர்க்க எனது மனைவி ருக்மணி ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனைப்படி 2016 முதல் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகிறேன்.
ஒரு இடத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தால் அதனை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பராமரித்து வருவேன். நடவு செய்வதற்கு தேவையான மரக்கன்றுகளை வீட்டில் பதியம் அமைத்து நானே தயாரிப்பேன்.
ஏனெனில் மரக்கன்றுகள் விலைக்கு வாங்கும் போது சில இடங்களில் விலை கூடுதலாக உள்ளது. நானே உற்பத்தி செய்யும் போது செலவு மிச்சமாகிறது. நடவு செய்ய, தண்ணீர் ஊற்ற சிலநேரங்களில் மரக்கன்றுகள் வாங்க தன்னார்வலர்கள் சிலர் நிதியுதவி செய்கின்றனர். இப்பணிகளில் மனைவி உறுதுணையாக இருந்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவர் தவறிவிட்டார். தற்போது சிலர் மரக்கன்றுகள் நடும் பணியில் உதவுகின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் 7ஆயிரம் பனை விதைகள், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன்.
வருத்தம் அடைவேன்:
இவற்றை ஸ்ரீரங்காபுரம், நாகலாபுரம் கன்னிமார் கோயில், பாலகிருஷ்ணாபுரம் விலக்கு முதல் சங்ககோணம் பட்டி வரை, லட்சுமிபுரம் புதுப்பட்டி, கண்டமனுார், கொடுவிலார்பட்டி பெரிய கண்மாய் கரைகள், ரோட்டின் ஓரங்களில் பள்ளி உள்ளிட்ட இடங்களில் புங்கை, வேம்பு, நாவல், நெல்லி, ஆலம், அரசமரகன்றுகள் நடவு செய்து பராமரிக்கிறேன். சில நேரங்களில் கால்நடைகள், மனிதர்கள் மரக்கன்றுகளை சேதப்படுத்தி விடுவர். அப்போது மிகவும் மனது வருத்தமாக இருக்கும். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 200 மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளேன்.', என்றார்.