/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி அருகே அரம் தயாரிப்பு தொழில் நிறுத்தம்! மாற்றுத் தொழிலுக்கு மாறிய கிராம மக்கள்
/
ஆண்டிபட்டி அருகே அரம் தயாரிப்பு தொழில் நிறுத்தம்! மாற்றுத் தொழிலுக்கு மாறிய கிராம மக்கள்
ஆண்டிபட்டி அருகே அரம் தயாரிப்பு தொழில் நிறுத்தம்! மாற்றுத் தொழிலுக்கு மாறிய கிராம மக்கள்
ஆண்டிபட்டி அருகே அரம் தயாரிப்பு தொழில் நிறுத்தம்! மாற்றுத் தொழிலுக்கு மாறிய கிராம மக்கள்
ADDED : செப் 02, 2024 12:17 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே அரம் தயாரிப்பு தொழில் நசிந்து போனதால் ரங்கராம்பட்டி கிராமத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மாற்று தொழிலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.
ஆண்டிபட்டி அருகே ரங்கராம்பட்டியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரம் தயாரிப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வந்தனர்.
நகை பட்டறை, தச்சு, உலோகம் தொடர்பான பணிகளில் அரம் என்ற பொருளின் தேவை அதிகம் இருக்கும். தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு தேவைப்படும் அரம் இப்பகுதியில் தயாரிக்கப்பட்டு வந்தது. பலரும் இதனை குடிசைத் தொழிலாக மேற்கொண்டனர்.
அறம் தயாரிப்புக்கு தேவையான இரும்பு துண்டுகளை கட் செய்து அதனை 10 முதல் 20 செ.மீ., அளவுள்ள அரங்களாக தயாரித்து வந்தனர். இரும்பு கம்பிகளை தட்டுதல், அதனை ராவுதல், சிறு உளி மூலம் மேடு பள்ளம் ஏற்படுத்தி அரமாக மாற்றும் பணிகளை பலரும் மேற்கொண்டனர். ஒரு டஜன் அறம் தயாரிப்பதற்கு கூலியாக ரூ.300 வரைதான் கிடைத்து வந்தது.
குறைவான கூலியால் பெண்களே இத்தொழிலில் அதிகம் ஈடுபட்டனர். அரத்திற்கு இணையான நவீன கருவிகள் பயன்பாட்டிற்கு வந்ததால் அரத்திற்கான தேவை நாளுக்கு நாள் குறைந்தது. வெளியூர்களில் இருந்து அரம் தயாரிப்புக்கான ஆர்டர் கிடைக்கவில்லை. குறைவாக கிடைத்த ஆர்டர்களால் கட்டுபடியான கூலியும் கிடைக்கவில்லை. இதனால் இத்தொழிலில் இருந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தங்களை மாற்று தொழிலுக்கு தயார்படுத்திக் கொண்டனர்.
இரு தலைமுறைகளாக இத்தொழிலில் செய்தவர்கள் தற்போது தச்சு, கட்டுமானம், விவசாய கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர்.
காலை முதல் இரவு வரை ஓயாத ஓசையுடன் குடிசைத் தொழிலாக இருந்த அரம் தயாரிப்பு தொழில் தற்போது இக்கிராமத்தில் முற்றிலும் நின்றுவிட்டது.