/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
/
எஸ்.பி., அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
ADDED : மார் 07, 2024 06:12 AM

தேனி: தேனி எஸ்.பி., அலுவலக முதல் தளத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தவர் மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கம்பம் வடக்குப்பட்டி ராஜா. இவரது வீடு அதே பகுதியில் உள்ள மின்வாரிய ஆபீஸ் ரோட்டில் உள்ளது. இந்த வீட்டில் ரூ.1 லட்சத்திற்கு ஒத்தி பேசி அதில் பொம்மையக்குமார் 37, வசித்தார். ஒத்தி காலம் முடிந்து பணத்தை திருப்பித்தர வீட்டின் உரிமையாளரிடம் வலியுறுத்தி உள்ளார். அதற்கு பணம் தரமுடியாது.
வீட்டை பழுதுபார்க்கும் வகையில் செலவழித்து விட்டேன் என்றும், வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். பொம்மையக்குமார் கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பொம்மையக்குமார் நேற்று தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் கேனுடன் எஸ்.பி., அலுவலகம் வந்தார்.
முதல் தளத்தில் எஸ்.பி., குறைதீர் கூட்ட அரங்கில் மனு அளித்துவிட்டு வெளியே வந்தவர், தான் கொண்டு வந்த கேனில் இருந்த தண்ணீர் கலந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு போலீசார் அவரை மீட்டனர். எஸ்.பி., சிவபிரசாத் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
வி.ஏ.ஓ., ஜீவா புகாரில், தேனி போலீசார் பொம்மையக்குமார் மீது, தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் பொம்மையக்குமார் மனு மீது, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி., மதுக்குமாரி விசாரித்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

