மினி பஸ்களால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்
மினி பஸ்களால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்
UPDATED : ஆக 06, 2026 05:21 PM
ADDED : ஆக 06, 2026 04:55 PM

ஆண்டிபட்டி:மினி பஸ்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஆண்டிபட்டி ஒன்றியம் சித்தார்பட்டியில் 40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.
ஆண்டிபட்டியில் இருந்து 13 கி.மீ.,தொலைவில் உள்ளது சித்தார்பட்டி. இக்கிராமத்திற்கு தேனி மற்றும் ஆண்டிபட்டியில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டிபட்டியில் இருந்து பல கிராமங்களை கடந்து சித்தார்பட்டி செல்வதால் இப்பகுதியில் பஸ்களுக்கான தேவை அதிகம் உள்ளது. இதனை சாதகமாக்கி இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்டோர் ஆட்டோக்களை இயக்கி வந்தனர். ஷேர் ஆட்டோவாக ரூ.20 கட்டணத்தில் ஆண்டிபட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கும், சித்தார்பட்டியில் இருந்து ஆண்டிபட்டிக்கும் தொடர்ச்சியாக ஆட்டோக்களை இயக்கினர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மினி பஸ் சேவை துவக்கப்பட்டது. ஆண்டிபட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு மினி பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் ஆட்டோக்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. வாழ்வாதாரம் பாதித்த ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு செல்லும் வகையில் ஆட்டோக்களை இயக்காமல் சித்தார்பட்டியில் நிறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். ஆட்டோக்களில் பயணித்து தங்களுக்கு ஆதரவு தரும்படி ஊர் பொதுமக்களிடம் ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
