/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்கறி, மூலிகைத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு பிரசாரம்
/
காய்கறி, மூலிகைத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு பிரசாரம்
காய்கறி, மூலிகைத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு பிரசாரம்
காய்கறி, மூலிகைத்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : அக் 14, 2024 04:06 AM

அதிக மழை, அதிக வெயில், அதிக பனி என சீதோஷ்ண நிலை மாற்றங்களை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஒலி, ஒளி, காற்று உள்ளிட்டவற்றில் பல்வேறு வகையான மாசுக்கள் உள்ளன. குறிப்பாக நகரங்களில் சேகரமாகும் குப்பையை கையாள போதிய பணியாளர்கள் இல்லாததால், ஆங்காங்கே தீ வைத்து எரிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதில் இருந்து தப்பிக்க, மரக்கன்றுகளை அதிகம் வளர்க்க வேண்டும். மரக்கன்றுகளை நடவு செய்ய முடியவில்லை என்றாலும் சிறிய அளவில் காய்கறித் தோட்டங்கள், மூலிகைச் செடிகள் வளர்க்கலாம்.
இவ்வாறு சின்னமனுார் கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறுங்காடு ஒன்றை மாணவ மாணவிகள் இணைந்து ஏற்படுத்தி உள்ளனர். இதில் வேம்பு, புங்கன், மருதம், மா, கொய்யா, எலுமிச்சை, நார்த்தை, பூவரசு, தென்னை, பாதாம், நெல்லி, வில்வம் மரங்களை வளர்த்து உள்ளனர். இதை தவிர்த்து தற்போது காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
சின்னமனுார் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. நகரில் 40 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கிருஷ்ணய்யர் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றி வருகின்றனர்.
மேலும் நகரின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பிரித்து, வீடுகள் தோறும் காய்கறித் தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விழிப்புணர்வு பணிக்கு என பசுமைப்படை ஆசிரியரை நியமித்துள்ளார். மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, வார விடுமுறை நாட்களில் இந்த பிரசாரப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
பசுமைப்படை பிரசாரம்:
முனிராஜா, தலைமை ஆசிரியர், கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி, சின்னமனுார்: வீடுகளில் கிடைக்கும் சிறிய இடங்களில் கூட மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் வளர்க்கலாம். எங்கள் பள்ளியில் மரங்களின் நன்மை பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறுகிறோம். வேளாண் கல்வி பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் 'குறுங்காடு' ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
தற்போது காய்கறி தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளனர். நகரில் அனைத்து வீடுகளிலும், கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்க்க வலியுறுத்தும் விழிப்புணர்வு பசுமைப்படை ஒன்றை ஏற்படுத்தி உள்ளோம். இதற்கென ஆசிரியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எங்களது நடவடிக்கைகளை பள்ளியின் நிர்வாகக்குழு ஊக்கப்படுத்தி வருகிறது. அதனால் மகிழ்ச்சியாக இப்பணிகளை முன்னெடுத்து வருகிறோம்., என்றார்.
விரைவில் விழிப்புணர்வு கண்காட்சி
சிங்காரவேலன், வழக் கறிஞர், சின்னமனுார்: காடுகள் பரப்பு குறைந்ததால் தான் இந்த அவலம். அத்துடன் நகரமயமாதல், சாலை விரிவாக்கம் என சொல்லி மரங்களை வெட்டி சாய்த்து விட்டனர். நெடுஞ்சாலைகளில் ஒதுங்கி நிற்க கூட மரங்கள் இல்லை. எனவே தான் மரக்கன்றுகளை வளர்ப்பது அவசியமாகிறது.
வீடுகளில் காய்கறி தோட்டம், மூலிகைத் தோட்டம் அமைக்கலாம். மூலிகைத் தோட்டம் அமைத்து அதில் துாதுவளை, சிரியா நங்கை, கீழாநெல்லி, பெரியா நங்கை உள்ளிட்ட மூலிகைகளை நடவு செய்யலாம். சிறு, சிறு உடல் உபாதைகளுக்கு மூலிகைகளை நாமே பயன்படுத்தலாம். இதற்காக எங்களின் நண்பர்கள் குழு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த உள்ளோம்.
தோட்டக்கலைத் துறை சார்பில் பழ மரக் கன்றுகள், மூலிகைச் செடிகளை மானிய விலையில் தருகின்றனர். அவற்றை வாங்கி பயன்படுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மிக முக்கியமாக பிளாஸ்டிக் ஒழிப்பில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் எவ்வாறு மாசுபடுகிறது என்பதை விளக்க கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளோம்.
நகரில் உள்ள லட்சுமி நகர், எழில்நகர், மின் நகர், சிவசக்தி நகர், அண்ணாமலை நகர், கண்ணம்மா கார்டன் உள்ளிட்ட விரிவாக்கப் பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு வசிப்பவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்ய வலியுறுத்த உள்ளோம். ஒவ்வொருவரும் களம் இறங்க வேண்டும். அப்போது தான் இயற்கையை காத்து சின்னமனுார் நகரை பசுமை நகராக மாற்ற முடியும்., என்றார்.