/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சூழல் மாசை தடுக்க வீட்டை பசுமையாக்க விழிப்புணர்வு
/
சூழல் மாசை தடுக்க வீட்டை பசுமையாக்க விழிப்புணர்வு
ADDED : நவ 18, 2024 07:11 AM

மக்கள் தொகை அதிகரிப்பால் நாம் வாழும் குடியிருப்புகள் பெரும்பாலானவை நெரிசல் மிகுந்த பகுதிகளாகவே உள்ளன. இதனால் காற்றோட்ட வசதி குறைந்து விட்டது. மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு கிடைப்பது இல்லை. இது மனிதனின் வாழ்நாளை குறைக்க ஒரு காரணமாக உள்ளது. இச்சூழ்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்க ஒவ்வொரு வீடுகளிலும் செடி, கொடிகள் வளர்த்து பசுமையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை சூழலுடன் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் அதை நம் வீட்டிலிருந்து துவக்குவதன் மூலம் முழுமை அடையும். மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு கற்றுக் கொடுத்தால் எதிர்கால சந்ததியினர் வாழ ஆக்சிஜன் கிடைக்கும். நாம் அடுத்த தலைமுறையினருக்கு அனைத்து வீடுகளுக்கு முன் இட வசதி இருந்தால் மரம் வளர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிப்பது, சொத்து சேர்ப்பது மட்டும் அடுத்த தலைமுறையினருக்காக செய்ய வேண்டிய கடமை அல்ல. நாம் வாழும் இந்த பூமியை சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அவர்களுக்கு தர வேண்டும். நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று மரங்கள், செடிகொடிகள் வளர்ப்பதாகும் என்ற விழிப்புணர்வை கூடலுார் சோலைக்குள் கூடல் அமைப்பு, இயற்கை ஆர்வலர்கள் இளம் வயதினர், பள்ளிக் கல்லுாரி மாணவர்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.
தொடர் பராமரிப்பு
கோபி கண்ணன், சோலைக்குள் கூடல் அமைப்பு, கூடலூர்: விடுமுறை நாட்களில் மாணவர்களிடம் நற்பண்பை வளர்க்க விரும்பினால் மரக்கன்றுகள் வளர்த்தலை ஊக்குவிக்க வேண்டும்.
சோலைக்குள் கூடல் அமைப்பில் ஏராளமான மாணவர்கள் உறுப்பினராக உள்ளனர். 378 வாரங்களாக தொடர்ந்து விடுமுறை நாட்களில் மரக்கன்றுகளை வளர்ப்பது, அவற்றை பராமரிப்பது என்ற பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். இது இவர்களது வாழ்க்கைக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைவதோடு மட்டுமல்லாது, இவர்களின் வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும். ஒவ்வொரு வீடுகளிலும் மரக்கன்றுகள் வளர்க்க விரும்பினால் எங்கள் அமைப்பு சார்பாக மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்புப் பணிகளையும் செய்து தருகிறோம்., என்றார்.
மாசு தடுக்க மரக்கன்றுகள் நடவு
கண்ணன், இயற்கை ஆர்வலர், கூடலுார்: சிறிய வீடுகளாக இருந்தாலும் சிறு செடிகளை வளர்க்க முடியும். சமையலறை, பாத்திரம் தேய்க்கும் அறை, பால்கனி, மொட்டை மாடி என அனைத்து பகுதிகளிலும் வளப்பதற்கான செடிகள் அதிகம் உள்ளன. அலங்காரப்படுத்தினால் பசுமையுடன் வீடும் அழகாக இருக்கும். சுத்தம் சுகாதாரமான ஆக்சிஜனை வெளியில் தேடுவதை விட வீட்டுக்குள்ளே செடி, கொடிகள் வளர்த்து இயற்கையான காற்றை சுவாசிக்கலாம். தினந்தோறும் நேரம் ஒதுக்கி செடிகளை பராமரித்தால் மனதில் இருக்கம் குறைவதுடன் மாசு ஏற்படுவதையும் தடுக்க முடியும்., என்றார்.