/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மயான வசதி இல்லாததால் ரோட்டோரம் அடக்கம் செய்யும் அவலம் அய்யம்பட்டி ஊராட்சி சுகாதார சீர்கேட்டில் தவிப்பு
/
மயான வசதி இல்லாததால் ரோட்டோரம் அடக்கம் செய்யும் அவலம் அய்யம்பட்டி ஊராட்சி சுகாதார சீர்கேட்டில் தவிப்பு
மயான வசதி இல்லாததால் ரோட்டோரம் அடக்கம் செய்யும் அவலம் அய்யம்பட்டி ஊராட்சி சுகாதார சீர்கேட்டில் தவிப்பு
மயான வசதி இல்லாததால் ரோட்டோரம் அடக்கம் செய்யும் அவலம் அய்யம்பட்டி ஊராட்சி சுகாதார சீர்கேட்டில் தவிப்பு
ADDED : அக் 22, 2024 05:31 AM

சின்னமனூர்: சின்னமனூர் ஊராட்சி, அய்யம்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு மயான வசதி இல்லாததால் ரோட்டோரம் அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது. குப்பை அகற்றா ததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
அய்யம்பட்டி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தில் ஜல்லிகட்டு நடைபெறும் முக்கிய ஊராக அய்யம்பட்டி உள்ளது.
இங்கு மல்லிகை பூ பிரதான சாகுபடியாகும். கிராமத்தில் நுழைவு பகுதி,சேவை மையம், பள்ளிக்கு பின்புறம் என ஆங்காங்கே குப்பை குவியல், குவியாக காணப்படுகிறது.
குப்பை முறையாக அகற்றாமல் ஓடையில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மை செட்டுகள் பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
மார்க்கையன்கோட்டை குடிநீர் திட்டத்தில் இருந்து வாரியம் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கு பதிலாக மிக குறைவாக குடிநீர் வழங்குவதாக புகார் கூறுகின்றனர்.
'ஜல்ஜீவன்' திட்டத்தில் தொட்டி கட்டப்பட்டு காட்சி பொருளாக மாறி உள்ளது. இத் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்யவில்லை.
ஆண்கள் சுகாதார வளாகம் ரூ.2.50 லட்சம் செலவில் கட்டப்பட்டது பயன்படுத்தப்படாமல் பராமரிப்பு இன்றி அசுத்தமாக உள்ளது.
குளத்து கரையில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தில் செப்டிக் டேங்க் உடைந்து கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம் வீசி அருகில் வசிப்போர் சுகாதார சீர்கேட்டில் தவிக்கின்றனர்.
ஊராட்சி அலுவலகம் அருகில் இரண்டு தெருக்களுக்கு இடையில் உள்ள ஓடையை கடக்க பாலம் இன்றி மழை காலங்களில் சுற்றி செல்ல வேண்டும்.
பல வீதிகள் குண்டும் குழியுமாகவும், பழுதானதெரு விளக்குகளை சீரமைப்பு செய்ய தாமதம் ஏற்படுவதால் இருளில் தவிக்கின்றனர். கால்நடை கிளை நிலையம் சேதமடைந்துள்ளது.
சுகாதார சீர்கேடு அதிகம்
மொக்கைவெள்ளை, அய்யம்பட்டி: காலனியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. மாதம் ஒருமுறை சாக்கடை சுத்தம் செய்வதால் சுகாதார கேடு நிலவுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் சப்ளையை துவக்க வேண்டும்.
ஆதிதிராவிடர்களுக்கு மயானம் இல்லாததால் ரோட்டோரங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்கின்றனர். மழைகாலங்களில் ஒதுங்கி நிற்க கூட முடிவதில்லை. மயானம் ஏற்படுத்தி தர வேண்டும். சமுதாய கூடம் அமைத்திட வேண்டும்.
கழிவு நீர் தேக்கம்
பெரியசாமி, அய்யம்பட்டி: குடிநீர் 3 நாட்களுக்கு ஒரு முறை வருவதால் தட்டுப்பாடு உள்ளது.தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
காலனியில் சாக்கடை கழிவுநீர் செல்ல தனிநபர் பட்டா இடம் என்பதால் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் சாக்கடையில் கழிவு நீர் தேங்கியுள்ளது. மாற்று வழி ஏற்படுத்தி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்ட பரிந்துரை
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஜல்ஜீவன் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குளத்து கரையில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சமீபத்தில் சுத்தம் செய்து கொடுத்தோம். ஒரு பிரிவினர் அந்த வளாகம் அங்கு இருப்பதை விரும்பவில்லை.
குப்பை சுத்தம் செய்வது மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படாததற்கு காரணம் துப்புரவு பணியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவரை வைத்து சமாளிக்க வேண்டி உள்ளது. இரு வீதிகளுக்கு இடையில் பாலம் கட்ட ஒதுக்கிய நிதி பற்றாக்குறை என்பதால் கட்ட முடியவில்லை.
ஆதிதிராவிடர்களுக்கு மயானம் அமைக்க ஊராட்சிக்கு சொந்தமான இடமில்லாத நிலை உள்ளது.
காலனியில் சாக்கடை குழாய் மூலம் கடத்துகிறோம். இடத்திற்காக தோட்ட உரிமையாளரிடம் பேசி பிரச்னை தீர்வு செய்யப்படும்.
ஜல்லி கட்டு நடத்த ஸ்டேடியம் கட்ட ஊராட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. என்றனர்.