/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கரையான் புற்றுக்களை தேடும் கரடிகள்
/
கரையான் புற்றுக்களை தேடும் கரடிகள்
ADDED : அக் 16, 2024 04:11 AM
ஆண்டிபட்டி, : வனப்பகுதியில் கரையான் புற்றுக்களை தேடி கரடிகள் வர வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆண்டிபட்டி சார்ந்துள்ள வனப்பகுதியில் கரடிகள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் வனப்பகுதியில் நிலவிய வறட்சியால் கரடிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து சென்றது. இதனால் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து மழை பெய்வதால் வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் மாறிவிட்டது. நிலத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியால் கரையான்கள், ஈசல்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. கரையான் மற்றும் ஈசல் கரடிக்கு பிடித்தமான உணவாகும். கரையான் புற்றுக்களை தோண்டி உள்ளிருக்கும் ஈசல்களை கரடி உறிஞ்சித் தின்றுவிடும்.
வனத்துறையினர் கூறியதாவது:வனப்பகுதியில் வன விலங்குகளுக்கான தண்ணீர் தேவைக்கு பல இடங்களில் தடுப்பணைகள் கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கணவாய் மலைப் பகுதியில் போர்வெல் அமைத்து சோலாரில் இயங்கும் மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கரடிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு இல்லை. புற்றுக்கள் இருக்கும் இடத்தில் கரடிகள் வர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.