ADDED : டிச 11, 2025 05:48 AM
மூணாறு: வட்டவடை ஊராட்சியில் பா.ஜ., சார்பில் நேற்று ' பந்த்' நடந்தது. அந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஊராட்சியில் 3ம் வார்டான கடவரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது.
அங்கு அக்கட்சியினர் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முக்கிய பிரமுகரும், ஊராட்சி முன்னாள் தலைவருமான ராமராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட்டில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்தமுறை 3ம் வார்டு இந்திய கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கப்பட்டு ராமர் என்பவர் போட்டியிட்டார். அந்த வார்டில் பா.ஜ. சார்பில் முனியசாமி போட்டியிட்டார்.
அவருக்கு ஆதராக செயல்பட்டவரின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் ஓட்டளிக்க வந்தபோது, அவர்களை இந்திய கம்யூனிஸ்டைச் சேர்ந்தவர்கள் தாக்கியதுடன், பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
அச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி, வட்டவடை ஊராட்சியில் பா.ஜ., சார்பில் நேற்று ' பந்த்' நடந்தது.
காலை 6:00 முதல் மாலை 6:00 வரை நடந்த பந்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

