ADDED : அக் 06, 2025 05:41 AM

உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்திருப்பதை கண்டித்து மாவட்ட பா.ஜ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இக்கோயில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஞானம் மன் கோயில் மறவர் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புகார் மனுக்களும் கலெக்டர், உயர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு டாஸ்மாக் கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கோயில் அருகில் மாவட்ட பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரத் தலைவர் நாகவேல் தலைமை வகித்தார். முன்னாள் நகரத் தலைவர் தெய்வம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாவட்டப் பொதுச் செயலாளர் வினோத் குமார், மலைச்சாமி, மாவட்டப் பொருளாளர் பொன் ஆனந்த், மாவட்டத் துணைத் தலைவர் தங்க பொன்ராஜா, பொருளாதாரப் பிரிவு தலைவர் பாலசுப்ரமணியன், வழக்கறிஞர் கார்த்திக், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமசாமி, நகர துணைத் தலைவர் மாரி ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர் பேசுகையில், ''உடனடியாக அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'', என்றார்.