ADDED : நவ 05, 2025 12:41 AM

கம்பம்: கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவர்கள் இடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க புத்தக கண்காட்சி நடந்தது.
சமீப காலமாக சமூக ஊடகங்கள், டிவி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் தொழில்நுட்ப வளர்ச்சியால் பொது மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது. காலையில் எழுந்தவுடன் செய்திதாள் வாசிப்பதை பள்ளிகளில் அறிவுறுத்தினாலும், மாணவர்களிடம் ஆர்வம் குறைவாகவே உள்ளது. எனவே மாணவர்கள் இடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்து, புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது.
கண்காட்சியில் அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், வரலாறு, அப்துல் கலாம், மகாத்மா காந்தி எழுதிய புத்தகங்கள், இலக்கியம், போட்டி தேர்விற்கு தேவையான புத்தகங்கள், ஆன்மிகம், அணு விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம், காமிக்ஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பு புத்தகங்களும் இடம் பெற்றிருந்தன. மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் புத்தகங்களை எடுத்து படித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் காந்த வாசன், இணைச் செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர் லோகநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

