ADDED : ஜன 15, 2024 12:22 AM
தேனி, : மாவட்டத்தில் நடக்க உள்ள புத்தகத் திருவிழா தொடர்பான அரசுத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பொங்கல் விடுமுறை முடிந்ததும் கலெக்டர் தலைமையில் நடக்க உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பிப்., முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கலெக்டர் ஷஜீவனா தலைமையில் பொங்கல் விடுமுறை முடிந்ததும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்தாண்டு பழனிச்செட்டிப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடந்தது. இந்தாண்டு மேலும் சில இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
புத்தக திருவிழாவில் மாவட்டத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரை அழைக்கவும், விழாவிற்கு வரும் சிறுவர்களை கவரும் வண்ணம் பொழுது போக்கு அம்சங்கள், உணவு ஸ்டால்கள் உள்ளிட்டவைக்கு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.
மேலும் தினமும் காலை, மாலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 'சலுகை கூப்பன்'கள் உள்ளிட்டவை வழங்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.