/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பைபாஸ் ரோடு அவசியம்
/
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பைபாஸ் ரோடு அவசியம்
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பைபாஸ் ரோடு அவசியம்
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பைபாஸ் ரோடு அவசியம்
ADDED : செப் 05, 2025 02:43 AM

கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டியை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி செக்போஸ்ட் வரை 2 கி.மீ., தூரம் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் நெடுஞ்சாலை ரோடுகள் மூன்று இடங்களில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
எந்நேரமும் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், டூரிஸ்ட் பெர்மிட் பெற்ற டாக்சிகள், வேன்கள் ஆண்டிபட்டியில் ரோடுகளின் ஓரங்களில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஆண்டிபட்டி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ரோட்டின் ஓரங்களில் இருந்த 100க்கும் மேற்பட்ட பழமையான பெரிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து வைகை ரோடு சந்திப்பு வரையும், பஸ் ஸ்டாண்ட் அருகிலும் ரோடு இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட ரோட்டை பயன்படுத்த முடியாமல் அப்பகுதியில் கடைகள் அமைத்து தற்போது ஆக்கிரமித்துக் கொண்டனர். ரோட்டின் ஓரங்களில் குடியிருப்புகள், கடைகள் வைத்திருப்பவர்கள் ரோடு வரை விரிவாக்கம் செய்துள்ளனர்.
பாதசாரிகளுக்கு நடைபாதை வசதி இன்றி ரோட்டில் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதால் அடிக்கடி விபத்துகளும் தொடர்கிறது.
ஆண்டிபட்டியில் பைபாஸ் ரோடு அமைக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வே செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடராமல் கிடப்பில் போடப்பட்டது. சர்வே செய்யப்பட்ட பல இடங்களில் கட்டிடங்களும் கட்டி விட்டனர். இதனால் ஏற்கனவே சர்வே செய்யப்பட்ட இடத்தில் பைபாஸ் ரோடு அமையுமா அல்லது மாற்று இடம் தேர்வு செய்யப்படுமா என்ற குழப்பமும் நீடிக்கிறது.
ஆண்டிபட்டியில் பைபாஸ் ரோடு அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்ட வில்லை என்ற புகாரும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அன்றாடம் போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்படும் ஆண்டிபட்டிக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர்.