/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பக்தர்கள் வாகன வேகத்தை கட்டுப்படுத்த முகாம் தேவை
/
பக்தர்கள் வாகன வேகத்தை கட்டுப்படுத்த முகாம் தேவை
ADDED : நவ 24, 2024 07:09 AM
கூடலுார் : சபரிமலை சென்று திரும்பும் பக்தர்களின் வாகன வேகத்தை கட்டுப்படுத்த குமுளியில் முகாம் அமைக்க தமிழக போலீசார் முன்வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பும்போது வாகனங்கள் மிகக் கூடுதல் வேகமாக செல்வது வழக்கமாக உள்ளது.
கேரளாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எருமேலியில் இருந்து குமுளி வரை ஆங்காங்கே போலீசார் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களின் தூக்கத்தை போக்கும் வகையில் சுக்கு காபி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன்பின் தொடரவில்லை.
தமிழக கேரள எல்லையான குமுளி மலைப் பாதை பல ஆபத்தான வளைவுகளை கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டு அதிவேகமாக வந்த ஐயப்ப பக்தர் வாகனம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி 8 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் கம்பம் பைபாஸ் ரோட்டில் அதிவேகமாக வந்த பக்தரின் கார் கவிழ்ந்து சிறுவன் உயிரிழந்தான். விபத்துகளை தடுக்க குமுளியில் போலீசார் முகாம் அமைத்து அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.