/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலக்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பலனில்லை
/
ஏலக்காய் விலை உயர்ந்தும் விவசாயிகளுக்கு பலனில்லை
ADDED : ஜூலை 31, 2025 03:10 AM
கம்பம்,: வரத்து குறைவால் ஏலக்காய் விலை படிப்படியாக உயர்ந்து சராசரி விலை கிலோ ரூ.2800 வரை உள்ளது . இந்த விலை உயர்வால் பலனில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 70 முதல் 80 சதவீதத்தை பகிர்ந்து கொள்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகா கணிசமாக உற்பத்தி செய்கின்றன. ஏலக்காய் விலை எட்டு மாதங்களுக்கு முன் வரை ரூ.2500 வரை விற்றது. பின் மளமளவென குறைந்து கிலோ ரூ.1800க்கு சென்றது. பின் மறுபடியும் உயர துவங்கியது. இருந்த போதும் ரூ 2500 ஐ தாண்டவில்லை.
இந்நிலையில் முதலில் பலத்த காற்றினால் ஏலச் செடிகள் சேதமடைந்தது. பின் தற்போது பெய்து வரும் மழையால் அழுகல் நோய் பாதிப்பால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு ஏலக்காய் வரத்து குறைந்துள்ளது . வரத்து குறைவால் சில வாரங்களாக விலை படிப்படியாக உயர்ந்து சராசரி விலை கிலோவிற்கு ரூ.2800 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்னமும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
ஆனால் விலை உயர்வால் எந்தவித பயனும் ஏல விவசாயிகளுக்கு ஏற்படாது என்கின்றனர். காரணம் கடந்த சில மாதங்களில் காற்று மற்றும் மழையால் செடிகள் சேதம் மற்றும் நோய் தாக்குதலால் கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விலை கிடைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காது என்கின்றனர்.

