/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு - 'தமிழ் அன்னை' படகை இயக்க தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்
/
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு - 'தமிழ் அன்னை' படகை இயக்க தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு - 'தமிழ் அன்னை' படகை இயக்க தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு - 'தமிழ் அன்னை' படகை இயக்க தமிழக அதிகாரிகள் வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2024 09:22 PM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணை கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது.
தேக்கடி ஏரியில் புதிதாக கேரள போலீஸ் படகு இயக்க அனுமதி வழங்கியதுபோல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'தமிழ் அன்னை' படகு இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் விஜய்சரண் தலைமையிலான கண்காணிப்பு குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையில் உள்ளது.
துணை குழுவில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருண் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழு 2023 நவ., 15ல் அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக இருந்தபோது ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில் நேற்று நீர்மட்டம் 129.65 அடியாக இருந்த நிலையில் (மொத்த உயரம் 152 அடி) அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மெயின் அணை, பேபி அணை, ஷட்டர், நீர்க்கசிவு காலரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது.
அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் இதுவரை நடந்த பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 1,7,8 ஆகிய மூன்று ஷட்டர்களை இயக்கிப் பார்க்கப்பட்டது.
அணைப்பகுதியில் பொருத்தப்பட்ட நிலநடுக்க கருவி (சீஸ்மோகிராப்), நிலஅதிர்வுக் கருவி (ஆக்சிலரோகிராப்) ஆகியவற்றை பார்வையிட்டு அதன் இயக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாலையில் குமுளி 1-ம் மைலில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் இக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தேக்கடி ஏரியில் புதிதாக கேரள போலீஸ் படகை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பல ஆண்டுகளாக அனுமதி தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக நீர்வளத் துறைக்கு சொந்தமான 'தமிழ் அன்னை' படகை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
அணைப்பகுதிக்கு பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்களை கொண்டு செல்லும் போது கேரள வனத்துறையினர் செய்து வரும் இடையூறுகளை தமிழக அதிகாரிகள் முன் வைத்தனர்.
பேபி அணையை பலப்படுத்துவது குறித்து மார்ச் மாதம் 15ஆம் தேதி ஆய்வு செய்ய வரவுள்ள மத்திய கண்காணிப்பு குழுவிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆய்வு தொடர்பான அறிக்கையை விஜய் சரண் தலைமையிலான கண்காணிப்பு குழுவினருக்கு இக்குழு அனுப்பி வைக்கும்.
அணை பலமாக உள்ளது
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்திற்கு ஏற்ப கசிவுநீர் இருக்க வேண்டும். 2023 நவ.,15ல் இக்குழு அணையை ஆய்வு மேற்கொண்ட போது நீர்மட்டம் 131.30 அடியாக இருந்த நிலையில் காலரியில் வெளியேறிய கசிவுநீர் ஒரு நிமிடத்திற்கு 62 லிட்டராக இருந்தது.
இந்நிலையில், நேற்று அணையின் நீர்மட்டம் 129.65 அடியாக இருந்த நிலையில் துணை குழு ஆய்வு மேற்கொண்ட போது ஒரு நிமிடத்திற்கு 61.81 லிட்டராக இருந்தது. நீர்மட்டத்தின் உயரத்திற்கு ஏற்ப கசிவுநீர் துல்லியமாக இருப்பதால் அணை பலமாகவே உள்ளது என குழுவின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.