/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோழி திருட்டு தகராறு கொலையில் முடிந்தது
/
கோழி திருட்டு தகராறு கொலையில் முடிந்தது
ADDED : அக் 22, 2025 07:48 PM
பெரியகுளம்: கோழி திருட்டு தொடர்பான முன்விரோதம் கொலையில் முடிந்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம், எ.புதுக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி மணிபால், 39. இவரது தோட்டத்தில் பங்களாபட்டி பெரியார் காலனியை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி மருதமுத்து, 23, தன் நண்பர்களுடன் சில மாதங்களுக்கு முன் கோழி திருடியுள்ளார். பின், மணிபால் தம்பி செந்தில்குமார் கடையிலும் திருடினர்.
ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பேச்சில், மணிபால் தரப்பினரிடம் காலில் விழுந்து மருதமுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் முன் விரோதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மருதமுத்து, தந்தை காளிமுத்து, 49. காந்தி நகரை சேர்ந்த இவரது நண்பர்கள் சீமான், 21, நாகராஜ், 24, பட்டாப்புளி நடுத்தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பங்களாபட்டி மதுரைவீரன் ஆகிய ஆறு பேரும் செந்தில்குமார் வீட்டின் கதவை அரிவாளால் வெட்டினர்.
அங்கு மணிபாலின் மற்ற தம்பிகளான ஜெயபால், ஜெயராஜ், பிச்சைமணி வந்தனர். இதில், மருதமுத்து அரிவாளால் ஜெயபாலை வெட்டினார். மருதமுத்துவுடன் வந்த ஐந்து பேரும் விறகு கட்டையால் மணிபால் தரப்பினரை தாக்கினர். தடுக்க வந்த மணிபாலுக்கும் வெட்டு விழுந்தது.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஜெயபாலை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், ஜெயபால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மணிபால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருதமுத்து, சீமான், 18 வயது சிறுவன், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.