ADDED : நவ 15, 2024 05:35 AM

தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். விழாவில் பள்ளி இணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், பள்ளி முதல்வர் மீனாகுமாரி, துணை முதல்வர்கள் முருகன், ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 200 படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். மாறுவேட போட்டி, களிமண் சிற்பம் செய்தல், ஓவியம், ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த குழந்தைகள் தினவிழாவிற்கு பள்ளி கல்வி சங்கச் செயலர் பாக்யாகுமாரி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டிகள் நடந்தன. பேச்சு போட்டியில் ஹேமந்த்ரா, மாறுவேடப் போட்டியில் கனிஷ்க்அபிமன்யு முதலிடம் வென்றனர். முதல் 3 இடங்களை வென்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பரந்தாமன் பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் வினோத்குமார், கார்த்திகேயன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
* சீலையம்பட்டி இந்து நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளிச் செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.