/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் தீயணைப்பு நிலைய கட்டுமானம் எப்போது; இடத்தேர்வில் இழுத்தடிக்கும் வருவாய்த்துறை
/
சின்னமனுார் தீயணைப்பு நிலைய கட்டுமானம் எப்போது; இடத்தேர்வில் இழுத்தடிக்கும் வருவாய்த்துறை
சின்னமனுார் தீயணைப்பு நிலைய கட்டுமானம் எப்போது; இடத்தேர்வில் இழுத்தடிக்கும் வருவாய்த்துறை
சின்னமனுார் தீயணைப்பு நிலைய கட்டுமானம் எப்போது; இடத்தேர்வில் இழுத்தடிக்கும் வருவாய்த்துறை
ADDED : நவ 04, 2024 05:14 AM
தீ விபத்துக்கள், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, ஆறு, கிணறு, குளம், கண்மாய், கடல் போன்ற நீர்நிலைகளில் ஆபத்தில் சிக்கி கொள்ளும் மனிதர்கள், பிற உயிரினங்களை காப்பாற்றும் மிகப் பெரிய பணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் செய்து வருகின்றனர்.
சின்னமனுாரில் கடந்த 2021ல் தனியார் வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்படத் துவங்கியது.
பிற நிலையங்களில் இருக்கும் வசதிகள் கூட இங்கு இல்லை. சின்னமனுார், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, தென் பழநி, சீப்பாலக்கோட்டை, எரசை, கன்னிசேர்வை பட்டி, அப்பி பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம், முத்துலாபுரம், ஊத்துப்பட்டி, மார்க்கையன்கோட்டை, குச்சனுார், அய்யம்பட்டி, புலி குத்தி, சிந்தலச்சேரி உள்ளிட்ட ஊர்கள் சின்னமனுார் தீயணைப்பு நிலையத்திற்கு கட்டுப்பட்டவையாக உள்ளன.
மிக முக்கியமாக மேகமலை பகுதியில் உள்ள 7 மலைக் கிராமங்களும் அடங்கும். சின்னமனுார் தீயணைப்பு நிலையத்தின் முக்கியத் துவத்தை கருதி மத்திய அரசின் பேரிடர் கால நிதியிலிருந்து ரூ.2.45 கோடியை புதிய கட்டடம் கட்டவும், நவீன உபகரணங்கள் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
சின்னமனுார் வனத்துறை அலுவலகம் அருகில் முதலில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் ஊரணி என்று கூறி வருவாய்த்துறை அனுமதி மறுத்துவிட்டனர். கிராமங்களில் இடம் தர வருவாய்த்துறை முன் வந்தாலும், நகரில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கான இடம் வேண்டும் என, தீயணைப்புத்துறை வலியுறுத்தியது. இதனால் அனுமதிக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் உள்ளனர்.
கலெக்டர் ஷஜீவனா இந்த பிரச்னையில் தலையிட்டு, தீயணைப்பு துறைக்கு நகருக்குள் அரசு புறம்போக்கு நிலத்தை, உடனடியாக கண்டறிந்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.