ADDED : ஏப் 04, 2025 02:49 AM
போடி:தமிழக அளவில் அரசு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் மூலம் கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் (சி.ஓ.ஏ.,) தேர்வு பழைய பாடத்திட்ட அடிப்படையில் 2025 ஜூன் 7, 8 ல் நடக்கிறது என அரசு தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.
தமிழக அளவில் அரசு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை, முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர் (டைப்ரைட்டிங்), சுருக்கெழுத்தர் (சார்ட் ஹேண்ட்), கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் (சி.ஓ.ஏ.,) தேர்வுகள் நடக்கும். அரசு துறைகளில் தட்டச்சர் பதவிக்கு டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால் ஆண்டுதோறும் டைப்ரைட்டிங், சி.ஓ.ஏ., தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித்தகுதியாக 10 ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சு தேர்வில் ஆங்கிலம் அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும்.
புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு துவங்குவதற்கு மென்பொருள் கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பழைய பாடத்திட்டம், கல்வித் தகுதி அடிப்படையில் சி.ஓ.ஏ., தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனையொட்டி 2025 ஜூன் மாதம் துவங்க உள்ள கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் (சி.ஓ.ஏ.,) தேர்வுக்கு ஏப்.,16 முதல் (www.tndtegteonline.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 11 விண்ணப்பிக்க கடைசி நாள். இதற்கான தேர்வு ஜூன் 7, 8 ல் நடக்கிறது. தேர்வு முடிவுகள் ஜூலை 17 ல் வெளியாகும் என அரசு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

