/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளிநாட்டு வேலை, நிறுவனத்தில் பங்கு என ரூ.72 லட்சம் மோசடி கடலுார் பெண் கைது
/
வெளிநாட்டு வேலை, நிறுவனத்தில் பங்கு என ரூ.72 லட்சம் மோசடி கடலுார் பெண் கைது
வெளிநாட்டு வேலை, நிறுவனத்தில் பங்கு என ரூ.72 லட்சம் மோசடி கடலுார் பெண் கைது
வெளிநாட்டு வேலை, நிறுவனத்தில் பங்கு என ரூ.72 லட்சம் மோசடி கடலுார் பெண் கைது
ADDED : நவ 09, 2024 11:20 PM

தேனி:தேனி பெண்ணிடம் வெளிநாட்டில் உறவினர்களுக்கு வேலை, நிறுவனத்தில் பங்கு எனக்கூறி ரூ.72.87 லட்சம் மோசடி செய்த கடலுார் மாவட்டம்விருதாசலம் மகேஸ்வரியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது கணவர் ராமலிங்கம், நண்பர் முகமது அசாருதீனை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடியில் வெளிநாடு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை கடலுாரைச் சேர்ந்த ராமலிங்கம், மனைவி மகேஸ்வரி நடத்தினர். நிறுவனத்தில் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியைச் சேர்ந்த சுமங்கலி பிரியா வேலை செய்தார்.
நிறுவனத்தின் மூலம் இவரது உறவினர்கள் 7 பேருக்கு வெளிநாட்டிற்கு வேலை வாங்கி தருவதாக ராமலிங்கம் ரூ.17.60 லட்சம் வாங்கினார். மேலும் கத்தாரில் நடத்தி வரும் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்க்க ரூ.50 லட்சம் கேட்டார்.
அதை நம்பிய சுமங்கலிபிரியா வங்கி கணக்கு மூலம் ரூ. 35.60 லட்சத்தை ராமலிங்கம், மகேஸ்வரிக்கு அனுப்பினார். ராமலிங்கத்தின் நண்பர் எனக்கூறிகொண்டு தஞ்சாவூர் அய்யம்பேட்டை இப்ராஹிம் நகர் முகமது அசாருதீன் அலைபேசியில் சுமங்கலிபிரியாவிடம் பேசினார்.
ராமலிங்கம் கத்தார் வங்கியில் ரூ.7 கோடி கடன் கேட்டார். அதற்கு ரூ.ஒரு கோடி டெபாசிட் செய்ய வேண்டும். தற்போது ரூ. 20 லட்சம் வழங்கினால் இதுவரை வாங்கிய மொத்த பணத்தையும் திருப்பி தருகிறோம் என்றார். அதை நம்பிய சுமங்கலி பிரியா மேலும் ரூ. 16.61 லட்சத்தை வழங்கினார். குவைத் விசா வாங்கி தருவதாக கூறி ரூ.3.06 லட்சம் வாங்கிய அசாருதீன் போலி விசாவை வழங்கினார்.
மொத்தம் ரூ.72.87 லட்சத்தை இழந்த சுமங்கலி பிரியா பணத்தை திருப்பி கேட்டபோது ராமலிங்கம், மகேஸ்வரி கொலை மிரட்டல் விடுத்தனர். சுமங்கலி பிரியா எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். குற்றபிரிவு போலீசார் விசாரித்து ராமலிங்கம், மகேஸ்வரி, முகமது அசாருதீன் மீது வழக்கு பதிந்தனர்.
கடலுாரில் இருந்த மகேஸ்வரியை இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்தனர்.