ADDED : ஜன 24, 2025 05:22 AM
கடமலைக்குண்டு: கடமலைக்கு அருகே கொம்புக்காரன் புலியூர் கிராமத்தை ஒட்டி உள்ள பாம்புச்சேரி மலையடிவாரத்தில் பல ஏக்கரில் தென்னை, முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் மலையடி வாரத்தில் உள்ள பாண்டி, சுதாகர், அண்ணாதுரை, மகேஸ்வரன், சின்னசென்றாயன் ஆகியோர்களின் தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இதே பகுதிக்குள் இரவில் புகுந்த காட்டு யானைகள் மீண்டும் தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
நேற்று முன்தினம் தாழையூத்து மலை அடிவாரத்தில் உள்ள சிமிசாஜி, பிரதீப், ஷாஜி ஜோஸ் ஆகியோர்களின் தோட்டத்திலும் 60 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், சொட்டு நீர் பாசன குழாய்களையும் சேதப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகளுக்கும் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

