/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செங்குளம் கண்மாயில் வளர்ந்த ஆகாய தாமரையால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு அகற்ற வலியுறுத்தும் லட்சுமிபுரம் பொது மக்கள்
/
செங்குளம் கண்மாயில் வளர்ந்த ஆகாய தாமரையால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு அகற்ற வலியுறுத்தும் லட்சுமிபுரம் பொது மக்கள்
செங்குளம் கண்மாயில் வளர்ந்த ஆகாய தாமரையால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு அகற்ற வலியுறுத்தும் லட்சுமிபுரம் பொது மக்கள்
செங்குளம் கண்மாயில் வளர்ந்த ஆகாய தாமரையால் குடிநீர் ஆதாரம் பாதிப்பு அகற்ற வலியுறுத்தும் லட்சுமிபுரம் பொது மக்கள்
ADDED : பிப் 22, 2024 06:05 AM

பெரியகுளம் : 'பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள செங்குளம் கண்மாய் நீர்தேக்கப் பகுதியில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பினால் குடிநீர் ஆதாரம் மாசுபட்டு வருவதை தடுத்திட, செடிகளை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, லட்சுமிபுரம் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இக்கண்மாய் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கிராம விவசாயிகள் கூட்டமைப்பு ஒற்றுமையினால் ஆக்கிரமிப்பு இல்லாத கண்மாயாக உள்ளது. லட்சுமிபுரம் மேற்குப் பகுதியில் உள்ள சொருகு மலையில் பெய்யும் மழை நீர், நீரோடை வழியாக வந்து வரத்து கால்வாய்கள் மூலம் செங்குளம் கண்மாய்க்கு நீர் வரத்து உள்ளது. இந்த கண்மாய் நிரம்பினால் சுற்றுப் பகுதியில்உள்ள நூற்றுக்கணக்கான கிணறுகளின் நீர்மட்டம் உயரும். கண்மாய் நீரினை நம்பி கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பல நூறு ஏக்கரில் பயிர் சாகுபடி பணிகள் நடக்கின்றன. மேலும் இப்பகுதியில் அதிகளவில் கரும்பு சாகுபடியாகிறது. இக்கண்மாயின் முழு பரப்பளவிலும் நீரே தெரியாத அளவிற்கு ஆகாய தாமரைச் செடிகள் வளர்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல் உள்ளது. இது கண்களுக்கு விருந்தாக இருந்தாலும் நீரில் வாழும் உயிரினங்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஆகாய தாமரை தடுத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.
மாசுபடும் கண்மாய்
ஜெயச்சந்திரன், கிராம நல கமிட்டி செயலாளர், லட்சுமிபுரம்: செங்குளம் கண்மாயில் ஆகாயத் தாமரைச் செடிகள் அதிகரித்துள்ளதால் நீர்நிலை மாசுபடும் அபாய நிலை உள்ளது. இக்கண்மாய் கரையில் லட்சுமிபுரம் ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக இரு கிணறுகள், பல 'போர்வெல்' அமைப்புகள் உள்ளன. ஆகாயத்தாமரை செடிகள் பச்சை நிறத்திலிருந்து தற்போது மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. ஓரிரு தினங்களில் அழுகி கண்மாயில் தேங்கினால் குடிநீர் ஆதாரம் பாழ்படும். கண்மாய் கரையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நூலகம், சமுதாயக்கூடம் உள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் வீச துவங்கிவிடும். ஊராட்சி, கிராம நல கமிட்டி, செங்குளம் ஆயக்கட்டுதாரர்கள் சங்கத்தில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றி பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி உள்ளோம். இது வரை நடவடிக்கை இல்லாததால் வேதனையாக உள்ளது. பொதுப்பணித்துறை போர்கால அடிப்படையில் ஆகாயத்தாமரை அகற்ற வேண்டும்., என்றார்.