ADDED : செப் 09, 2026 06:03 PM
தேனி, செப்.10–
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப் 14ல் கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக கோயில்கள், பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. மேலும் விழா செலவுகள், அன்னதானம் போன்றவற்றுக்கு வீடு, கடைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக நன்கொடை வசூலிக்கின்றனர். இந்நிலையில் வாலிபர்கள் சிலர் எம்.ஜி.ஆர்., நகர், என்.ஆர்.டி., நகரில் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். விருப்பமுள்ளவர்களிடம் மட்டும் வசூலிக்காமல், நன்கொடை தர மறுப்பவர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். நன்கொடை வசூலிக்க யாரிடமும் கட்டாயப்படுத்த கூடாது என போலீசாரும், ஹிந்து அமைப்புகளும் எச்சரித்துள்ளனர். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
