/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்க தொடர் கண்காணிப்பு அவசியம் - தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
/
பெரியாறு அணையில் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்க தொடர் கண்காணிப்பு அவசியம் - தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
பெரியாறு அணையில் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்க தொடர் கண்காணிப்பு அவசியம் - தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
பெரியாறு அணையில் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்க தொடர் கண்காணிப்பு அவசியம் - தமிழக அரசை வலியுறுத்தும் விவசாயிகள்
ADDED : ஆக 01, 2025 09:48 PM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதியை நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் மட்டுமே சாத்தியமாகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கி கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலபடுத்திவிட்டு உயர்ந்த பட்ச கொள்ளளவான 152 அடி தேக்கலாம் எனவும் 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. 142 அடியாக உயர்த்தி நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரளா இடையூறுகளை செய்கிறது. இதனால் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் தமிழக பகுதியில் விவசாய நிலங்கள் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.
அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை கேரளா தடுத்து வருவதாகவும், அணைக்குச் செல்லும் வள்ளக்கடவு வனப்பாதையை சீரமைக்காமல் உள்ளதாகவும், பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள 13 மரங்களை வெட்டுவதற்கு கேரளா முட்டுக்கட்டை போடுவதாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
ஜூலை 31ல் உச்ச நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'அணையில் பராமரிப்பு பணிகள் செய்யவும் அணையை ஒட்டியுள்ள பேபி அணை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்கும், வள்ளக்கடவிலிருந்து அணைப்பகுதிக்கு தளவாடப் பொருட்களைக் கொண்டு வரும் வனப் பகுதி பாதையை சீரமைக்கவும் சுற்றுச்சூழல் அனுமதியை நான்கு வாரத்தில் வழங்கும் படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தமிழக அரசுக்கு சாதகமாக இருந்த போதிலும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க விடாமல் கேரளா பல்வேறு தடைகளை போடும் என்பதால் நான்கு வாரத்திற்குள் அனுமதியை பெறும் வகையில் தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே கூறப்பட்டதுதான் அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்:
தமிழக அரசு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு உடனடியாக தரவேண்டும் என ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திதான். தற்போதுதான் நான்கு வார காலக்கெடு வைத்துள்ளனர். கண்டிப்பாக இதற்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் எதிர்ப்பு தெரிவித்து பிரமாணப் பத்திரத்தை உறுதியாக தாக்கல் செய்யும்.
2014ல் இதில் மிகவும் தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆனால் முழுமையாக அமல்படுத்தப் படவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசால் வாங்கப்பட்ட தமிழ் அன்னை படகு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் மிதந்த வண்ணம் உள்ளது. படகை இயக்க அனுமதி பெற முடியாத நிலையில் மரத்தை வெட்ட எப்படி அனுமதி கிடைக்கும். இருந்த போதிலும் 4 வாரத்திற்குள் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்க தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், என்றார்.

