/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேய்ச்சல் நிலங்களைத் தேடி மாவட்டம் கடந்து வந்த நாட்டு மாடுகள் விளை நிலங்கள் குறைந்ததால் அவதி
/
மேய்ச்சல் நிலங்களைத் தேடி மாவட்டம் கடந்து வந்த நாட்டு மாடுகள் விளை நிலங்கள் குறைந்ததால் அவதி
மேய்ச்சல் நிலங்களைத் தேடி மாவட்டம் கடந்து வந்த நாட்டு மாடுகள் விளை நிலங்கள் குறைந்ததால் அவதி
மேய்ச்சல் நிலங்களைத் தேடி மாவட்டம் கடந்து வந்த நாட்டு மாடுகள் விளை நிலங்கள் குறைந்ததால் அவதி
ADDED : அக் 16, 2024 05:08 AM

ஆண்டிபட்டி, : மதுரை மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் குறைந்ததால் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்காக ஆண்டிபட்டி பகுதியில் தங்க வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் சார்ந்துள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. நாட்டு மாடுகளை பராமரிப்பாளர்கள் கொட்டத்தில் அடைத்து தீவனம் கொடுத்து பராமரிப்பது இல்லை. அன்றாடம் அவைகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று இரவில் கொட்டத்தில் அடைத்து வைக்கின்றனர். தற்போது இப்பகுதிகளில் போதுமான மேச்சல் நிலங்கள் இல்லை. கணவாய் சார்ந்துள்ள வனப்பகுதியில் மேய்ச்சல் மாடுகளை கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் மாடு பராமரிப்பாளர்கள் நூறு முதல் 300 மாடுகள் வரை ஒன்று சேர்த்து மேச்சலுக்காக ஆண்டிபட்டி தாலுகாவின் பல்வேறு இடங்களுக்கு ஓட்டிச் செல்கின்றனர்.
நாட்டு மாடு பராமரிப்பாளர் சின்ன ராஜா கூறியதாவது: உசிலம்பட்டி பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்கான இடங்கள் குறைந்துள்ளது. தரிசு நிலங்கள் அதிகம் இல்லை. ஏற்கனவே உள்ள நிலங்களில் தற்போது மானாவாரி விவசாயத்தை துவக்கி உள்ளனர். தற்போது மேய்ச்சல் நிலங்கள் இல்லை. இதனால் ஆண்டிபட்டி சார்ந்துள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு மாடுகளை மொத்தமாக ஓட்டி வந்துள்ளோம். தற்போது ஆண்டிபட்டி ஜம்புலிப்புத்தூர் அருகே திறந்த வெளியில் இரவில் மாடுகளை அடைத்து பாதுகாத்து வருகிறோம்.
தினமும் 3 முதல் 5 கி.மீ., தூரம் மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச்சென்று திரும்புகிறோம். சமீபத்தில் பெய்த மழையால் தீவனத்திற்கு பாதிப்பு இல்லை. குளங்கள் கண்மாய்களில் நீர் தேங்காததால் மாடுகள் குடிப்பதற்கான தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இன்னும் 3 மாதங்கள் வரை ஆண்டிபட்டி சார்ந்துள்ள மேய்ச்சல் நிலங்களே போதுமானதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.