ADDED : ஜன 27, 2025 03:56 AM

தேனி: உத்தமபாளையம் அருகே பைனான்ஸ் பங்குதாரர் இறந்த பின் அவருக்கான ரூ.61 லட்சத்தை மனைவி பங்கஜத்திடம் வழங்காமல் கொலை மிரட்டல் விடுத்த பைனான்சியர் கருப்பசாமியை 42, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் காமயகவுண்டன்பட்டி பழனிசாமி 60. அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இருவரும் இணைந்து கோம்பை, திருவாரூரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் பழனிசாமி விபத்தில் இறந்தார். இதனால் பழனிசாமிக்கு உரிய பங்குத்தொகையை பிரித்துத் தருமாறு அவரது மனைவி பங்கஜம் , கருப்பசாமியிடம் கேட்டார்.
பங்குத்தொகை ரூ.61 லட்சத்தை வழங்குவதாக எழுதிக் கொடுத்தார். ஆனால் பணத்தை வழங்காமல் கருப்பசாமி காலம் தாழ்த்தி வந்தார். பணத்தை கேட்ட பங்கஜத்திடம் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.

