/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பு குமுளி சத்திரம் விமான நிலையத்திற்கு சிக்கல் - இடுக்கி எம்.பி., டீன் குரியகோஸ் எதிர்ப்பு

ADDED : நவ 09, 2025 03:03 AM
கூடலுார்: இடுக்கி மாவட்டத்தில் 54 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கேரள அரசு அறிவித்ததை தொடர்ந்து குமுளி சத்திரம் பகுதியில் என்.சி.சி., விமான நிலையத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலையோர மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சி திட்டங்களையும் அரசு முடக்குவதாக இடுக்கி காங்., எம்.பி., டீன் குரியகோஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக - கேரள எல்லையில் உள்ள குமுளி அருகே சத்திரம் பகுதியில் 2017ல் என்.சி.சி., விமான ஓடுதளத்தின் கட்டுமானப் பணி துவங்கியது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரம் என்.சி.சி., வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் இடுக்கி மாவட்டத்தில் ஏதேனும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு சத்திரம் விமான ஓடு பாதையை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு விமானப்படையினர் ஹெலிகாப்டரை சத்திரம் விமான ஓடு தளத்தில் தரையிறக்கி சோதனை செய்தனர். இதனிடையே இடுக்கி மாவட்டத்தில் 54 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக கேரள அரசு வரைவு அறிக்கை வெளியிட்டதன் மூலம் சத்திரம் விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடங்கியது. இதனால் மலையோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு முடக்குவதாக இடுக்கி காங்., எம்.பி., டீன் குரியகோஸ் குற்றம் சாற்றியுள்ளார்.
ரத்து செய்ய வேண்டும் எம்.பி., கூறியதாவது:
சத்திரம் விமான ஓடுதளம் திட்டத்திற்காக அரசு ஏற்கனவே நிர்வாக அனுமதி வழங்கியிருந்தது. ரூ.10 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு அனுமதி அளித்த சில மாதங்களிலேயே அதே சர்வே எண்ணில் உள்ள நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவித்திருக்கிறார்கள். வள்ளக்கடவு அருகே லைப் திட்ட வீடுகள், பட்டா நிலங்களை அரசு அபகரிக்க பார்க்கிறது. மாவட்டத்திலுள்ள 54 ஆயிரம் ஏக்கர் வருவாய் துறை நிலங்களை அரசு வன நிலங்களாக மாற்றியுள்ளது. ஏராளமானோர் பயன்பெறக்கூடிய வகையில் உள்ள திட்டங்கள் செயல்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக வரைவு அறிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும்.