ADDED : பிப் 21, 2024 05:44 AM
கூடலுார்: கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மானாவாரி பயிர்களில் மான்கள் தொல்லையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள பெருமாள் கோயில், கல்லுடைச்சான் பாறை, கொங்குச்சி பாறை, கழுதை மேடு, பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. தட்டாம்பயிர், மொச்சை, எள், அவரை உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன.
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் ஏராளமான மான்கள் புகுந்து மானாவாரி பயிர்களை சேதப்படுத்துகிறது. செடியில் உள்ள பூ மற்றும் பிஞ்சுகளை சாப்பிடுவதுடன் பயிரையும் சேதப்படுத்தி விடுகிறது. மேலும் காட்டுப் பன்றிகளும் அவ்வப்போது புகுந்து சேதத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மானாவாரி நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. லோயர்கேம்பில் இருந்து பெருமாள் கோயில் வரை அமைக்கப்பட்டுள்ள மின்வேலி சேதமடைந்து காட்சிப் பொருளாக உள்ளது. வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

