ADDED : ஆக 19, 2025 12:56 AM

தேவதானப்பட்டி; பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலத்தில் பல நுாறு மூடைகள் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டு 11 நாட்களாகியும் எடை போடாததால் விவசாயிகள் சிரமம் அடை கின்றனர்.
ஜெயமங்கலம், நடுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி பகுதியில் 900 ஏக்கரில் நடவு செய்ய இரண்டாம் போகம் நெல் தற்போது அறுவடை நடந்து வருகிறது.
அறுவடை செய்த நெல் மூடைகள் ஜெயமங்கலம் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு கொள்முதல் செய்வதற்காக ரோட்டில் கொட்டி வைத்துள்ளனர்.
முதல்கட்டமாக 50 க்கும் அதிகமான விவசாயிகள் நெல்மணிகளை குவித்துள்ளனர். 11 நாட்கள் ஆகியும் நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் நெல் கொள்முதல் செய்வதற்கு வரவில்லை.
அருகாமையில் மேல்மங்கலம் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் 41 கிலோ மூடைக்கு ரூ.980 வீதம் கொள்முதல் செய்து, பட்டுவாடா துவங்கியுள்ளது.
ஜெயமங்கலம் விவசாயிகளின் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யததால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
'விரை வில் கொள்முதல் செய்யுங்கள்' கிருஷ்ணன், முன்னாள் ராணுவ வீரர், விவசாயி: நெல் கொள்முதல் செய்யாததால் அம்பாரமாக குவிந்திருக்கும் நெல் மணிகள், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைகின்றது. அதிகாரிகளிடம் கேட்டால் நாளை கொள்முதல் செய்வோம் என நாட்களை தள்ளிப்போட்டு 11 நாட்கள் ஆகிறது.
இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளோம். நுகர் பொருள் வாணிப கழகத்தினர் நெல்லை உடனடியாக எடை போட்டு, பணம் பட்டுவாடா செய்ய வேண்டும்,' என்றார்.--