/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எதிர்பார்த்த மழை பெய்யாததால் காய்கறி நடவு தாமதம்! லட்சக்கணக்கான காய்கறி நாற்றுக்கள் தேக்கம்
/
எதிர்பார்த்த மழை பெய்யாததால் காய்கறி நடவு தாமதம்! லட்சக்கணக்கான காய்கறி நாற்றுக்கள் தேக்கம்
எதிர்பார்த்த மழை பெய்யாததால் காய்கறி நடவு தாமதம்! லட்சக்கணக்கான காய்கறி நாற்றுக்கள் தேக்கம்
எதிர்பார்த்த மழை பெய்யாததால் காய்கறி நடவு தாமதம்! லட்சக்கணக்கான காய்கறி நாற்றுக்கள் தேக்கம்
ADDED : ஆக 10, 2024 06:39 AM

ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் எதிர்பார்த்த மழை இல்லாததால் மானாவாரி, இறவை பாசன நிலங்களில் காய்கறி நடவை விவசாயிகள் தாமதப்படுத்தி உள்ளனர். ஆடிப்பட்டம் நடவுக்கு தேவைப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் லட்சக்கணக்கணக்கில் தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் பல வகை பூ நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடி தாலுகாக்களில் உள்ள பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காய்கறி சாகுபடி நடைபெறும். ஆடிப்பட்டத்தில் கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பூச்செடி நடவுக்கு அதிக முக்கியத்துவம் தருவர்.
நடவுக்கு தேவையான காய்கறி நாற்றுக்களை விவசாயிகள் ஒரு மாதத்திற்கு முன்பே விளைவிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது லட்சக்கணக்கான நாற்றுக்கள் இருப்பில் உள்ளன.
இன்னும் சில வாரங்களில் இறவை பாசன நிலங்களில் காய்கறி நடவு முழுவீச்சில் துவங்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் தற்போது எதிர்பார்த்த மழை கிடைக்க வில்லை என்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் குழித்தட்டு முறையில் நாற்றுகள் விளைவிக்கும் மையம் செயல்படுகிறது. சில விவசாயிகள் நிலத்தில் நாற்றுக்களை விளைவித்தும் வருகின்றனர்.
தற்போது தக்காளி, கத்தரி, காலிபிளவர், மிளகாய் நாற்றுக்கள் தரத்திற்கு ஏற்ப ஒரு நாற்றின் விலை 60 காசு முதல் ஒரு ரூபாய் வரை விலை உள்ளது. 10 கிராம் கொண்ட பாக்கெட் விதைகளை ரூ.100 முதல் ரூ.1000 வரை விலை கொடுத்து வாங்கி நாற்றுக்களை விளைவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் விளைவிக்கும் நாற்றுக்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்பதால் பேரையூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, மேலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் விவசாயிகள் இங்கு வந்து நாற்றுக்களை வாங்கிச் செல்வர். மாவட்டத்தில் நடவுக்கு தேவையான மழை இன்னும் பெய்யவில்லை.
மேலும் கத்தரிக்காய் கிலோ ரூ.20 முதல் 30 வரையும், தக்காளி 15 கிலோ கொண்ட பெட்டி விலை ரூ.200 அளவில் குறைந்துள்ளதால் விவசாயிகளிடம் நடவு ஆர்வம் குறைந்துள்ளது. ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் வரை காய்கறிகள் நடவு பணி தொடரும் என தெரிவித்தனர்.

