/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவர் ஜெயந்தி விழா: போலீசார் தடியடி
/
தேவர் ஜெயந்தி விழா: போலீசார் தடியடி
ADDED : அக் 31, 2025 02:10 AM
ஆண்டிபட்டி:  க.விலக்கில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் இளைஞர்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
க.விலக்கில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சுற்று கிராமங்களான முத்தனம்பட்டி, பிராதுக்காரன்பட்டி, திருமலாபுரம், கரட்டுப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் தனித்தனி குழுக்களாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனி குழுக்களாக ஆட்டம் பாட்டத்துடன் வெடி வெடித்தபடி சென்றனர். இளைஞர்கள் பைக்குகளில் கூச்சலிட்டு சாகசம் செய்தனர். கூட்டம் அதிகமானதால் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தேனி எஸ்.பி.சினேகா பிரியா தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் கூட்டத்தை கலைந்து போக செய்தனர். அதன் பின்னர் தேனி - மதுரை ரோட்டில் நீண்ட வரிசையில் நின்றிருந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

