/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு பக்தர்கள் கோயில்களில் திரண்டு சுவாமி தரிசனம்
/
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு பக்தர்கள் கோயில்களில் திரண்டு சுவாமி தரிசனம்
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு பக்தர்கள் கோயில்களில் திரண்டு சுவாமி தரிசனம்
ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபாடு பக்தர்கள் கோயில்களில் திரண்டு சுவாமி தரிசனம்
ADDED : ஜூலை 25, 2025 03:07 AM

தேனி: மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகள் அருகே மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி, கோயில்களில் மக்கள் வழிபாடு செய்தனர்.வீரபாண்டி முல்லை பெரியாற்றங்கரையில் திதி மண்டபம் பகுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு ஆற்றில் குளித்து தர்பணம் செய்தனர். கால்நடைகளுக்கு அகத்தி கீரைகள், பழங்கள் வழங்கினர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சோமஸ்கந்தர் சன்னதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி.,நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகங்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கம்பம்: சுருளி அருவியில் நேற்று அதிகாலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சிரமப்பட்டு வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு வாரமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ளப் பெருக்கு குறைந்ததால் நேற்று முதல் குளிக்க அனுமதித்தனர். நேற்று காலை திரளாக பொதுமக்கள் அருவியில் குளித்து, ஆற்றங்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காக்கைகளுக்கு உணவிடுவது, அன்னதானம் கொடுப்பது, ஆற்றில் எள்ளு விடுவது என செய்தனர். முன்னதாக பூதநாராயணர் கோயில், சுருளிவேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தங்களது முன்னோர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்து, மோட்ச தீபம் ஏற்றினர். ஆதி அண்ணாமலையார்கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
போடி: பிச்சாங்கரை மலைப்பகுதி கீழச்சொக்கநாதர் கோயில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலாகும். சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் ெசய்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. மேலச் சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
போடி அருகே அணைக்கரைப்பட்டி மரக்காமலை முனீஸ்வரன், லாட சன்னாசிராயர் கோயிலில் சன்னாசி ராயர், முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள், அபிஷேகம் நடந்தது. அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார். போடி கொண்டரங்கி மல்லையசாமி கோயில், சுப்ரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி கரையோரம் நேற்று ஆடிஅமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் வராக நதியில் குளித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டிப்பட்டி: ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். அமாவாசையை முன்னிட்டு வேலப்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள சிவபெருமான், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு 21 வகையான அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

