/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புரட்டாசி மகாளய அமாவாசையில் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
/
புரட்டாசி மகாளய அமாவாசையில் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
புரட்டாசி மகாளய அமாவாசையில் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
புரட்டாசி மகாளய அமாவாசையில் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
ADDED : அக் 03, 2024 06:32 AM

தேனி: மகாளய அமாவா சையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர். நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி நகர் பகுதியில் பெத்தாட்சி விநாயகர் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பலர் அகத்திக் கீரைகளை பசுக்களுக்கு வழங்கி வழிபட்டனர்.
வீரபாண்டி முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் முன்னோர்களை வேண்டி, அவர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.
போடி: பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர். காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
மரக்காமலை சன்னாசிராயர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயிலில் அதிகாலை முதலே பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து சென்றனர். மலைப் பகுதியில் மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி வேலப்பரை வழிபட்டனர். வேலப்பருக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். காவல் தெய்வம் கருப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பரிவார தெய்வங்களான கருடாழ்வார், காலபைரவர், சக்கரத்தாழ்வார், விநாயகர், நவக்கிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம் செய்து மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், அன்னதானம் வழங்கப்பட்டது.
சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் ஐயப்ப சுவாமி, 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், மேலப்பிள்ளையார் கோயில் உட்பட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
கம்பம்: சுருளி அருவியில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டனர். தேனி, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக வாகனங்களில் வந்தனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்ததால் வாகனங்களை நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கி.மீ. துாரத்திற்கு வாகனங்கள் ரோட்டின் பக்கவாட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கூட்டம் அதிகரிப்பு
சுருளி அருவியில் குறைவான தண்ணீர் விழுந்ததால், குளிப்பதற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரணம் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
சுருளி அருவியில் குளித்த பொது மக்கள் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம், தங்கள் முன்னோர்களின் பெயர்களை கூறி தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து இங்குள்ள பூதநாராயணர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் முன்னோர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் நடந்த அன்னதானத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். இந்த கோயிலில் மண்டலாபிஷேகமும் நடைபெற்றது.
சிவனடியார் முருகன் சுவாமிகள் அன்னதானத்தை நடத்தினார். போதிய எண்ணிக்கையில் உடைமாற்றும் அறைகள் இல்லாமலும், கழிப்பறை வசதி இல்லாமலும் பொது மக்கள் அவதிப்பட்டனர். தேவையான வசதிகள் செய்து தர வனத்துறை முன்வர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துச் சென்றனர்.