/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குச்சனுார் கோயிலில் குவிந்தனர் பக்தர்கள்
/
குச்சனுார் கோயிலில் குவிந்தனர் பக்தர்கள்
ADDED : ஜூலை 20, 2025 03:02 AM

சின்னமனுார்:தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் நேற்று ஆடி முதல் சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் சனீஸ்வரருக்கு தனிக்கோயில் குச்சனுாரை தவிர வேறு எங்கும் இல்லை. சுயம்புவாக தோன்றிய சனீஸ்வரர் சுரபி நதிக் கரையில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் பெருந்திருவிழா நடைபெறும். அப்போது நான்கு சனிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பர். கோயிலில் திருப்பணிகள் நடப்பதால் கொடி மரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே ஹிந்து சமய அறநிலைய துறை திருவிழாவை கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்தது. ஐகோர்ட் உத்தரவின்படி திருக்கல்யாணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
நேற்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் அதிகாலை 4:00 மணியிலிருந்து கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுரபி நதியில் குளித்து காக்கை வாகனம் வாங்கி விடுவது, எள்ளு, பொரி போன்றவற்றை படைத்து நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
மலர் அலங்காரத்தில் இருந்த சனீஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையிலான பணியாளர்கள் செய்திருந்தனர்.

